Monday, April 27, 2020

புலம்பல்

ஐயோ!  ஜனம்பெருத்த  நகரி  தனிமையாக  உட்கார்ந்திருக்கிறாளே!  விதவைக்கு  ஒப்பானாளே!  ஜாதிகளில்  பெரியவளும்,  சீமைகளில்  நாயகியுமாயிருந்தவள்  கப்பங்கட்டுகிறவளானாளே!  {Lam  1:1}

 

இராக்காலத்திலே  அழுதுகொண்டிருக்கிறாள்,  அவளுடைய  கண்ணீர்  அவள்  கன்னங்களில்  வடிகிறது;  அவளுடைய  நேசர்  எல்லாருக்குள்ளும்  அவளைத்  தேற்றுவார்  ஒருவரும்  இல்லை;  அவளுடைய  சிநேகிதர்  எல்லாரும்  அவளுக்குத்  துரோகிகளும்  சத்துருக்களுமானார்கள்.  {Lam  1:2}

 

யூதா<Judah>  ஜனங்கள்  உபத்திரவப்படவும்,  கொடுமையான  அடிமைவேலைசெய்யவும்  சிறைப்பட்டுப்போனார்கள்.  அவள்  புறஜாதிகளுக்குள்ளே  தங்குகிறாள்,  இளைப்பாறுதல்  அடையாள்;  அவளைத்  துன்பப்படுத்துகிற  யாவரும்  அவளை  இடுக்கமான  இடங்களிலே  தொடர்ந்துபிடித்தார்கள்.  {Lam  1:3}

 

பண்டிகைக்கு  வருவார்  இல்லாததினால்,  சீயோனுக்குப்<Zion>  போகிற  வழிகள்  புலம்புகிறது;  அவள்  வாசல்கள்  எல்லாம்  பாழாய்க்கிடக்கிறது;  அவள்  ஆசாரியர்கள்  தவிக்கிறார்கள்;  அவள்  கன்னிகைகள்  சஞ்சலப்படுகிறார்கள்;  அவளுக்குக்  கசப்பே  உண்டாயிருக்கிறது.  {Lam  1:4}

 

அவள்  சத்துருக்கள்  தலைமையானார்கள்,  அவள்  பகைஞர்  சுகித்திருக்கிறார்கள்;  அவளுடைய  திரளான  பாதகங்களினிமித்தம்  கர்த்தர்  அவளைச்  சஞ்சலப்படுத்தினார்;  அவள்  பிள்ளைகள்  சத்துருவுக்கு  முன்பாகச்  சிறைப்பட்டுப்போனார்கள்.  {Lam  1:5}

 

சீயோன்<Zion>  குமாரத்தியின்  அழகெல்லாம்  அவளை  விட்டுப்போயிற்று;  அவள்  பிரபுக்கள்  மேய்ச்சலைக்  காணாத  மான்களுக்கு  ஒப்பாகி,  தொடருகிறவனுக்கு  முன்பாகச்  சத்துவமில்லாமல்  நடந்துபோனார்கள்.  {Lam  1:6}

 

தனக்குச்  சிறுமையும்  தவிப்பும்  உண்டாகிய  நாட்களிலே  எருசலேம்<Jerusalem>  பூர்வநாட்கள்  முதற்கொண்டு  தனக்கு  உண்டாயிருந்த  இன்பமானவைகளையெல்லாம்  நினைக்கிறாள்;  அவளுக்கு  உதவிசெய்வார்  இல்லாமல்  அவளுடைய  ஜனங்கள்  சத்துருவின்  கையிலே  விழுகையில்,  பகைஞர்  அவளைப்  பார்த்து,  அவளுடைய  ஓய்வுநாட்களைக்  குறித்துப்  பரியாசம்பண்ணினார்கள்.  {Lam  1:7}

 

எருசலேம்<Jerusalem>  மிகுதியாய்ப்  பாவஞ்செய்தாள்;  ஆதலால்  தூரஸ்திரீயைப்போலானாள்;  அவளைக்  கனம்பண்ணினவர்கள்  எல்லாரும்  அவளை  அசட்டைபண்ணுகிறார்கள்;  அவளுடைய  மானத்தைக்  கண்டார்கள்;  அவளும்  பெருமூச்சுவிட்டுப்  பின்னிட்டுத்  திரும்பினாள்.  {Lam  1:8}

 

அவளுடைய  அசூசம்  அவள்  வஸ்திர  ஓரங்களில்  இருந்தது;  தனக்கு  வரப்போகிற  முடிவை  நினையாதிருந்தாள்;  ஆகையால்  அதிசயமாய்த்  தாழ்த்தப்பட்டுப்போனாள்;  தேற்றுவார்  இல்லை;  கர்த்தாவே,  என்  சிறுமையைப்  பாரும்;  பகைஞன்  பெருமைபாராட்டினானே.  {Lam  1:9}

 

அவளுடைய  இன்பமான  எல்லாவற்றின்மேலும்  சத்துரு  தன்  கையை  நீட்டினான்;  உம்முடைய  சபையிலே  வரலாகாதென்று  தேவரீர்  விலக்கிய  புறஜாதியார்  உமது  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசித்ததைக்  கண்டாள்.  {Lam  1:10}

 

அவளுடைய  ஜனங்களெல்லாரும்  அப்பந்தேடித்  தவிக்கிறார்கள்;  தங்கள்  உயிரைக்  காப்பாற்றத்  தங்களுடைய  இன்பமானவைகளை  ஆகாரத்துக்கென்று  கொடுத்துவிட்டார்கள்;  கர்த்தாவே,  நோக்கிப்பாரும்;  எண்ணமற்றவளானேனே.  {Lam  1:11}

 

வழியில்  நடந்துபோகிற  சகல  ஜனங்களே,  இதைக்குறித்து  உங்களுக்குக்  கவையில்லையா?  கர்த்தர்  தமது  உக்கிரமான  கோபமூண்ட  நாளிலே  என்னைச்  சஞ்சலப்படுத்தினதினால்  எனக்கு  உண்டான  என்  துக்கத்துக்குச்  சரியான  துக்கம்  உண்டோ  என்று  என்னை  நோக்கிப்பாருங்கள்.  {Lam  1:12}

 

உயரத்திலிருந்து  என்  எலும்புகளில்  அக்கினியை  அனுப்பினார்,  அது  அவைகளில்  பற்றியெரிகிறது;  என்  கால்களுக்கு  வலையை  வீசினார்;  என்னைப்  பின்னிட்டு  விழப்பண்ணினார்;  என்னைப்  பாழாக்கினார்;  நித்தம்  நான்  பலட்சயப்பட்டுப்  போகிறேன்.  {Lam  1:13}

 

என்  பாதகங்களின்  நுகம்  அவருடைய  கையால்  பூட்டப்பட்டிருக்கிறது;  அவைகள்  பிணைக்கப்பட்டு  என்  கழுத்தைச்  சுற்றிக்கொண்டது;  என்  பெலனை  விழப்பண்ணினார்;  நான்  எழுந்திருக்கக்  கூடாதபடிக்கு  ஆண்டவர்  என்னை  ஒடுக்குகிறவர்களின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்.  {Lam  1:14}

 

என்னிலுள்ள  பராக்கிரமசாலிகளாகிய  என்னுடையவர்களெல்லாரையும்  ஆண்டவர்  மிதித்துப்போட்டார்;  என்  வாலிபரை  நொறுக்கும்படி  எனக்கு  விரோதமாய்  ஒரு  கூட்டத்தை  வரவழைத்தார்;  திராட்சப்பழத்தை  ஆலையில்  மிதிக்கிறதுபோல,  ஆண்டவர்  யூதா<Judah>  குமாரத்தியாகிய  கன்னிகையை  மிதித்தார்.  {Lam  1:15}

 

இவைகளினிமித்தம்  நான்  அழுகிறேன்;  என்  கண்,  என்  கண்ணே  நீராய்ச்  சொரிகிறது;  என்  உயிரைக்  காப்பாற்றித்  தேற்றுகிறவர்  என்னை  விட்டுத்  தூரமானார்;  பகைஞன்  மேற்கொண்டதினால்  என்  பிள்ளைகள்  பாழாய்ப்போனார்கள்.  {Lam  1:16}

 

சீயோன்<Zion>  தன்  கைகளை  விரிக்கிறாள்;  அவளைத்  தேற்றுவார்  ஒருவருமில்லை;  கர்த்தர்  யாக்கோபின்<Jacob>  சுற்றுப்புறத்தாரை  அவனுக்குச்  சத்துருக்களாகக்  கட்டளையிட்டார்;  அவர்களுக்குள்ளே  எருசலேம்<Jerusalem>  தூரஸ்திரீக்கு  ஒப்பானாள்.  {Lam  1:17}

 

கர்த்தர்  நீதிபரர்;  அவருடைய  வாக்குக்கு  விரோதமாய்  நான்  எழும்பினேன்;  ஜனங்களே,  நீங்கள்  எல்லாரும்  இதைக்  கேட்டு  என்  துக்கத்தைப்  பாருங்கள்;  என்  கன்னிகைகளும்  என்  வாலிபரும்  சிறைப்பட்டுப்போனார்கள்.  {Lam  1:18}

 

என்னைச்  சிநேகித்தவர்களைக்  கூப்பிட்டேன்,  அவர்களோ  என்னை  மோசம்போக்கினார்கள்;  என்  ஆசாரியர்களும்  என்  மூப்பர்களும்  தங்கள்  உயிரைக்  காப்பாற்றத்  தங்களுக்கு  அப்பந்தேடுகையில்  நகரத்தில்  மூச்சொடுங்கி  மாண்டார்கள்.  {Lam  1:19}

 

கர்த்தாவே,  பாரும்,  நான்  நெருக்கப்படுகிறேன்;  என்  குடல்  கொதிக்கிறது;  நான்  கடுந்துரோகம்பண்ணினபடியினால்  என்  இருதயம்  வியாகுலப்படுகிறது;  வெளியிலே  பட்டயம்  என்னைப்  பிள்ளையற்றவளாக்கிற்று,  வீட்டுக்குள்ளே  மரணம்  வந்திருக்கிறது.  {Lam  1:20}

 

நான்  தவிக்கிறதை  அவர்கள்  கேட்டாலும்  என்னைத்  தேற்றுவார்  ஒருவரும்  இல்லை;  என்  பகைஞர்  எல்லாரும்  எனக்கு  வந்த  ஆபத்தைக்  கேட்டு,  தேவரீர்  அதைச்  செய்தபடியால்  சந்தோஷமாயிருக்கிறார்கள்;  நீர்  கூறின  நாளை  வரப்பண்ணுவீர்,  அப்பொழுது  அவர்களும்  என்னைப்போலாவார்கள்.  {Lam  1:21}

 

அவர்களுடைய  பொல்லாப்பெல்லாம்  உமது  முகத்துக்கு  முன்பாக  வரக்கடவது.  என்  சகல  பாதகங்களினிமித்தமும்  நீர்  எனக்குச்  செய்ததுபோல  அவர்களுக்கும்  செய்யும்;  என்  பெருமூச்சுகள்  மிகுதியாயின,  என்  இருதயம்  பலட்சயமாயிருக்கிறது.  {Lam  1:22}

 

ஐயோ!  ஆண்டவர்  தமது  கோபத்தில்  சீயோன்<Zion>  குமாரத்தியை  மந்தாரத்தினால்  மூடினார்;  அவர்  தமது  கோபத்தின்  நாளிலே  தமது  பாதபீடத்தை  நினையாமல்  இஸ்ரவேலின்<Israel>  மகிமையை  வானத்திலிருந்து  தரையிலே  விழத்தள்ளினார்.  {Lam  2:1}

 

ஆண்டவர்  தப்பவிடாமல்  யாக்கோபின்<Jacob>  வாசஸ்தலங்களையெல்லாம்  விழுங்கினார்;  அவர்  யூதா<Judah>  குமாரத்தியின்  அரண்களையெல்லாம்  தமது  சினத்திலே  இடித்து,  தரையோடே  தரையாக்கிப்போட்டார்;  ராஜ்யத்தையும்  அதின்  பிரபுக்களையும்  பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.  {Lam  2:2}

 

அவர்  தமது  உக்கிரகோபத்திலே  இஸ்ரவேலின்<Israel>  கொம்பு  முழுவதையும்  வெட்டிப்போட்டார்;  சத்துருவுக்கு  முன்பாக  அவர்  தமது  வலதுகரத்தைப்  பின்னாகத்  திருப்பி,  சுற்றிலும்  இருப்பதைப்  பட்சிக்கிற  அக்கினிஜுவாலையைப்போல்  யாக்கோபுக்கு<Jacob>  விரோதமாக  எரித்தார்.  {Lam  2:3}

 

பகைஞனைப்போல்  தம்முடைய  வில்லை  நாணேற்றினார்;  சத்துருவைப்போல்  தம்முடைய  வலதுகரத்தை  நீட்டிநின்று,  கண்ணுக்கு  இன்பமானதையெல்லாம்  அழித்துப்போட்டார்;  சீயோன்<Zion>  குமாரத்தியின்  கூடாரத்திலே  தம்முடைய  உக்கிரத்தை  அக்கினியைப்போல்  சொரியப்பண்ணினார்.  {Lam  2:4}

 

ஆண்டவர்  பகைஞன்போலானார்;  இஸ்ரவேலை<Israel>  விழுங்கினார்;  அதின்  அரமனைகளையெல்லாம்  விழுங்கினார்;  அதின்  அரண்களை  அழித்து,  யூதா<Judah>  குமாரத்திக்கு  மிகுந்த  துக்கிப்பையும்  சலிப்பையும்  உண்டாக்கினார்.  {Lam  2:5}

 

தோட்டத்தின்  வேலியைப்போல  இருந்த  தம்முடைய  வேலியைப்  பலவந்தமாய்ப்  பிடுங்கிப்போட்டார்;  சபைகூடுகிற  தம்முடைய  ஸ்தலங்களை  அழித்தார்;  கர்த்தர்  சீயோனிலே<Zion>  பண்டிகையையும்  ஓய்வுநாளையும்  மறக்கப்பண்ணி,  தமது  உக்கிரமான  கோபத்தில்  ராஜாவையும்  ஆசாரியனையும்  புறக்கணித்துவிட்டார்.  {Lam  2:6}

 

ஆண்டவர்  தமது  பலிபீடத்தை  ஒழித்துவிட்டார்;  தமது  பரிசுத்த  ஸ்தலத்தை  வெறுத்துவிட்டார்;  அதினுடைய  அரமனைகளின்  மதில்களைச்  சத்துருவின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  பண்டிகைநாளில்  ஆரவாரம்பண்ணுகிறதுபோல்  கர்த்தரின்  ஆலயத்தில்  ஆரவாரம்பண்ணினார்கள்.  {Lam  2:7}

 

கர்த்தர்  சீயோன்<Zion>  குமாரத்தியின்  அலங்கத்தை  நிர்மூலமாக்க  நினைத்தார்;  நூலைப்போட்டார்;  அழிக்காதபடித்  தம்முடைய  கையை  அவர்  முடக்கிக்கொண்டதில்லை;  அரணிப்பையும்  அலங்கத்தையும்  புலம்பச்செய்தார்;  அவைகள்  முற்றிலும்  பெலனற்றுக்  கிடக்கிறது.  {Lam  2:8}

 

அவள்  வாசல்கள்  தரையில்  அமிழ்ந்திக்கிடக்கிறது;  அவள்  தாழ்ப்பாள்களை  முறித்து  உடைத்துப்போட்டார்;  அவள்  ராஜாவும்  அவள்  பிரபுக்களும்  புறஜாதியாருக்குள்  இருக்கிறார்கள்;  வேதமுமில்லை;  அவள்  தீர்க்கதரிசிகளுக்குக்  கர்த்தரால்  தரிசனம்  கிடைக்கிறதுமில்லை.  {Lam  2:9}

 

சீயோன்<Zion>  குமாரத்தியின்  மூப்பர்கள்  தரையில்  உட்கார்ந்து  மௌனமாய்  இருக்கிறார்கள்;  தங்கள்  தலைகளின்மேல்  புழுதியைப்  போட்டுக்கொள்ளுகிறார்கள்;  இரட்டு  உடுத்தியிருக்கிறார்கள்;  எருசலேமின்<Jerusalem>  கன்னியர்கள்  தலைகவிழ்ந்து  தரையை  நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.  {Lam  2:10}

 

என்  ஜனமாகிய  குமாரத்தியின்  நொறுங்குதலினிமித்தம்  கண்ணீர்  சொரிகிறதினால்  என்  கண்கள்  பூத்துப்போகிறது;  என்  குடல்கள்  கொதிக்கிறது;  என்  ஈரல்  இளகித்  தரையிலே  வடிகிறது;  குழந்தைகளும்  பாலகரும்  நகரத்தின்  வீதிகளிலே  மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.  {Lam  2:11}

 

அவைகள்  குத்துண்டவர்களைப்போல  நகரத்தின்  வீதிகளிலே  மூர்ச்சித்துக்கிடக்கும்போதும்,  தங்கள்  தாய்களின்  மடியிலே  தங்கள்  பிராணனை  விடும்போதும்,  தங்கள்  தாய்களை  நோக்கி:  தானியமும்  திராட்சரசமும்  எங்கே  என்கிறார்கள்.  {Lam  2:12}

 

எருசலேம்<Jerusalem>  குமாரத்தியே,  நான்  உனக்குச்  சாட்சியாக  என்னத்தைச்  சொல்லுவேன்?  உன்னை  எதற்கு  ஒப்பிடுவேன்?  சீயோன்<Zion>  குமாரத்தியாகிய  கன்னிகையே,  நான்  உன்னைத்  தேற்றும்படிக்கு  உன்னை  எதற்கு  நிகர்சொல்லுவேன்?  உன்  காயம்  சமுத்திரத்தைப்போல்  பெரிதாயிருக்கிறதே,  உன்னைக்  குணமாக்குகிறவன்  யார்?  {Lam  2:13}

 

உன்  தீர்க்கதரிசிகள்  அபத்தமும்  வியர்த்தமுமான  தரிசனங்களை  உனக்காகத்  தரிசித்தார்கள்;  அவர்கள்  உன்  சிறையிருப்பை  விலக்கும்படி  உன்  அக்கிரமத்தை  எடுத்துக்காட்டாமல்,  அபத்தமானவைகளையும்  கேடானவைகளையும்  உனக்காகத்  தரிசித்தார்கள்.  {Lam  2:14}

 

வழிப்போக்கர்  யாவரும்  உன்பேரில்  கை  கொட்டுகிறார்கள்;  எருசலேம்<Jerusalem>  குமாரத்தியின்பேரில்  ஈசற்போட்டு,  தங்கள்  தலைகளைத்  துலுக்கி:  பூரணவடிவும்  சர்வபூமியின்  மகிழ்ச்சியுமான  நகரம்  இதுதானா  என்கிறார்கள்.  {Lam  2:15}

 

உன்  பகைஞர்  எல்லாரும்  உன்பேரில்  தங்கள்  வாயைத்  திறக்கிறார்கள்;  ஈசற்போட்டுப்  பற்கடிக்கிறார்கள்;  அதை  விழுங்கினோம்,  நாம்  காத்திருந்த  நாள்  இதுவே,  இப்பொழுது  நமக்குக்  கிடைத்தது,  அதைக்  கண்டோம்  என்கிறார்கள்.  {Lam  2:16}

 

கர்த்தர்  தாம்  நினைத்ததைச்  செய்தார்;  பூர்வநாட்கள்  முதற்கொண்டு  தாம்  கட்டளையிட்ட  தமது  வார்த்தையை  நிறைவேற்றினார்;  அவர்  தப்பவிடாமல்  நிர்மூலமாக்கி,  உன்மேல்  பகைஞன்  சந்தோஷிக்கும்படி  செய்தார்;  உன்  சத்துருக்களின்  கொம்பை  உயர்த்தினார்.  {Lam  2:17}

 

அவர்கள்  இருதயம்  ஆண்டவரை  நோக்கிக்  கூப்பிடுகிறது;  சீயோன்<Zion>  குமாரத்தியின்  மதிலே,  இரவும்  பகலும்  நதியவ்வளவு  கண்ணீர்  விடு,  ஓய்ந்திராதே,  உன்  கண்ணின்  கறுப்புவிழி  சும்மாயிருக்கவொட்டாதே.  {Lam  2:18}

 

எழுந்திரு,  இராத்திரியிலே  முதற்சாமத்தில்  கூப்பிடு;  ஆண்டவரின்  சமுகத்தில்  உன்  இருதயத்தைத்  தண்ணீரைப்போல  ஊற்றிவிடு;  எல்லாத்  தெருக்களின்  முனையிலும்  பசியினால்  மூர்ச்சித்துப்போகிற  உன்  குழந்தைகளின்  பிராணனுக்காக  உன்  கைகளை  அவரிடத்திற்கு  ஏறெடு.  {Lam  2:19}

 

கர்த்தாவே,  யாருக்கு  இந்தப்பிரகாரமாகச்  செய்தீரென்று  நோக்கிப்பாரும்;  ஸ்திரீகள்  கைக்குழந்தைகளாகிய  தங்கள்  கர்ப்பக்கனியைத்  தின்னவேண்டுமோ?  ஆண்டவருடைய  பரிசுத்த  ஸ்தலத்தில்  ஆசாரியனும்  தீர்க்கதரிசியும்  கொலைசெய்யப்படவேண்டுமோ?  {Lam  2:20}

 

இளைஞனும்  முதிர்வயதுள்ளவனும்  தெருக்களில்  தரையிலே  கிடக்கிறார்கள்;  என்  கன்னிகைகளும்  என்  வாலிபரும்  பட்டயத்தால்  விழுந்தார்கள்;  உமது  கோபத்தின்  நாளிலே  வெட்டி,  அவர்களைத்  தப்பவிடாமல்  கொன்றுபோட்டீர்.  {Lam  2:21}

 

பண்டிகைநாளில்  கும்புகளை  வரவழைப்பதுபோல்  சுற்றிலுமிருந்து  எனக்குத்  திகில்களை  வரவழைத்தீர்;  கர்த்தருடைய  கோபத்தின்  நாளிலே  தப்பினவனும்  மீதியானவனுமில்லை;  நான்  கைகளில்  ஏந்தி  வளர்த்தவர்களை  என்  பகைஞன்  நாசம்பண்ணினான்.  {Lam  2:22}

 

ஆண்டவருடைய  சினத்தின்  மிலாற்றினால்  உண்டான  சிறுமையைக்  கண்ட  புருஷன்  நான்.  {Lam  3:1}

 

அவர்  என்னை  வெளிச்சத்திலே  அல்ல,  இருளிலே  அழைத்து  நடத்திவந்தார்.  {Lam  3:2}

 

அவர்  தமது  கையை  எனக்கு  விரோதமாகவே  நித்தமும்  திருப்பினார்.  {Lam  3:3}

 

என்  சதையையும்  என்  தோலையும்  முற்றலாக்கினார்;  என்  எலும்புகளை  நொறுக்கினார்.  {Lam  3:4}

 

அவர்  எனக்கு  விரோதமாகக்  கொத்தளங்கட்டி,  கசப்பினாலும்  வருத்தத்தினாலும்  என்னை  வளைந்துகொண்டார்.  {Lam  3:5}

 

பூர்வகாலத்தில்  செத்துக்கிடக்கிறவர்களைப்போல  என்னை  இருளான  இடங்களில்  கிடக்கப்பண்ணினார்.  {Lam  3:6}

 

நான்  புறப்படக்கூடாதபடி  என்னைச்  சூழ  வேலியடைத்தார்;  என்  விலங்கைப்  பாரமாக்கினார்.  {Lam  3:7}

 

நான்  சத்தமிட்டுக்  கூப்பிட்டாலும்,  என்  ஜெபத்துக்கு  வழியை  அடைத்துப்போட்டார்.  {Lam  3:8}

 

வெட்டின  கற்களின்  சுவரால்  என்  வழிகளை  அடைத்துப்போட்டார்,  என்  பாதைகளைத்  தாறுமாறாக்கினார்.  {Lam  3:9}

 

அவர்  எனக்குப்  பதிவிருக்கிற  கரடியும்,  மறைவிடங்களில்  தங்குகிற  சிங்கமுமாயிருக்கிறார்.  {Lam  3:10}

 

என்  வழிகளை  அப்புறப்படுத்தி,  என்னைத்  துண்டித்துப்போட்டார்;  என்னைப்  பாழாக்கிவிட்டார்.  {Lam  3:11}

 

தமது  வில்லை  நாணேற்றி,  என்னை  அம்புக்கு  இலக்காக  வைத்தார்.  {Lam  3:12}

 

தம்முடைய  அம்பறாத்தூணியின்  அம்புகளை  என்  உள்ளிந்திரியங்களில்  படப்பண்ணினார்.  {Lam  3:13}

 

நான்  என்  ஜனத்தார்  யாவருக்கும்  பரியாசமும்,  நித்தம்  அவர்கள்  கின்னரப்  பாடலுமானேன்.  {Lam  3:14}

 

கசப்பினால்  என்னை  நிரப்பி,  எட்டியினால்  என்னை  வெறிக்கச்செய்தார்.  {Lam  3:15}

 

அவர்  பருக்கைக்கற்களால்  என்  பற்களை  நொறுக்கி,  என்னைச்  சாம்பலில்  புரளப்பண்ணினார்.  {Lam  3:16}

 

என்  ஆத்துமாவைச்  சமாதானத்துக்குத்  தூரமாக்கினார்;  சுகத்தை  மறந்தேன்.  {Lam  3:17}

 

என்  பெலனும்  நான்  கர்த்தருக்குக்  காத்திருந்த  நம்பிக்கையும்  அழிந்துபோயிற்று  என்றேன்.  {Lam  3:18}

 

எட்டியும்  பிச்சுமாகிய  என்  சிறுமையையும்  என்  தவிப்பையும்  நினைத்தருளும்.  {Lam  3:19}

 

என்  ஆத்துமா  அவைகளை  நினைத்து  நினைத்து  எனக்குள்  முறிந்துபோகிறது.  {Lam  3:20}

 

இதை  என்  மனதிலே  வைத்து,  நம்பிக்கைகொண்டிருப்பேன்.  {Lam  3:21}

 

நாம்  நிர்மூலமாகாதிருக்கிறது  கர்த்தருடைய  கிருபையே,  அவருடைய  இரக்கங்களுக்கு  முடிவில்லை.  {Lam  3:22}

 

அவைகள்  காலைதோறும்  புதியவைகள்;  உமது  உண்மை  பெரிதாயிருக்கிறது.  {Lam  3:23}

 

கர்த்தர்  என்  பங்கு  என்று  என்  ஆத்துமா  சொல்லும்;  ஆகையால்  அவரிடத்தில்  நம்பிக்கைகொண்டிருப்பேன்.  {Lam  3:24}

 

தமக்குக்  காத்திருக்கிறவர்களுக்கும்  தம்மைத்  தேடுகிற  ஆத்துமாவுக்கும்  கர்த்தர்  நல்லவர்.  {Lam  3:25}

 

கர்த்தருடைய  இரட்சிப்புக்கு  நம்பிக்கையோடு  காத்திருக்கிறது  நல்லது.  {Lam  3:26}

 

தன்  இளம்பிராயத்தில்  நுகத்தைச்  சுமக்கிறது  மனுஷனுக்கு  நல்லது.  {Lam  3:27}

 

அவரே  அதைத்  தன்மேல்  வைத்தாரென்று  அவன்  தனித்திருந்து  மௌனமாயிருக்கக்கடவன்.  {Lam  3:28}

 

நம்பிக்கைக்கு  இடமுண்டோ  என்று  தன்  வாயைத்  தூளில்  நுழுந்துவானாக.  {Lam  3:29}

 

தன்னை  அடிக்கிறவனுக்குத்  தன்  கன்னத்தைக்  காட்டி,  நிந்தையால்  நிறைந்திருப்பானாக.  {Lam  3:30}

 

ஆண்டவர்  என்றென்றைக்கும்  கைவிடமாட்டார்.  {Lam  3:31}

 

அவர்  சஞ்சலப்படுத்தினாலும்  தமது  மிகுந்த  கிருபையின்படி  இரங்குவார்.  {Lam  3:32}

 

அவர்  மனப்பூர்வமாய்  மனுபுத்திரரைச்  சிறுமையாக்கிச்  சஞ்சலப்படுத்துகிறதில்லை.  {Lam  3:33}

 

ஒருவன்  பூமியில்  சிறைப்பட்டவர்கள்  யாவரையும்  தன்  கால்களின்கீழ்  நசுக்குகிறதையும்,  {Lam  3:34}

 

உன்னதமானவரின்  சமுகத்தில்  மனுஷருடைய  நியாயத்தைப்  புரட்டுகிறதையும்,  {Lam  3:35}

 

மனுஷனை  அவனுடைய  வழக்கிலே  மாறுபாடாக்குகிறதையும்,  ஆண்டவர்  காணாதிருப்பாரோ?  {Lam  3:36}

 

ஆண்டவர்  கட்டளையிடாதிருக்கக்  காரியம்  சம்பவிக்கும்  என்று  சொல்லுகிறவன்  யார்?  {Lam  3:37}

 

உன்னதமானவருடைய  வாயிலிருந்து  தீமையும்  நன்மையும்  புறப்படுகிறதில்லையோ?  {Lam  3:38}

 

உயிருள்ள  மனுஷன்  முறையிடுவானேன்?  அவன்  தன்  பாவத்துக்கு  வரும்  தண்டனையைக்குறித்து  முறையிடுகிறதென்ன?  {Lam  3:39}

 

நாம்  நம்முடைய  வழிகளைச்  சோதித்து  ஆராய்ந்து,  கர்த்தரிடத்தில்  திரும்பக்கடவோம்.  {Lam  3:40}

 

நாம்  நம்முடைய  கைகளோடுங்கூட  நம்முடைய  இருதயத்தையும்  பரலோகத்திலிருக்கிற  தேவனிடத்திற்கு  ஏறெடுக்கக்கடவோம்.  {Lam  3:41}

 

நாங்கள்  துரோகஞ்செய்து,  கலகம்பண்ணினோம்;  ஆகையால்  தேவரீர்  மன்னியாதிருந்தீர்.  {Lam  3:42}

 

தேவரீர்  கோபத்தால்  மூடிக்கொண்டு,  எங்களைத்  தப்பவிடாமல்  பின்தொடர்ந்து  கொன்றீர்.  {Lam  3:43}

 

ஜெபம்  உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு  உம்மை  மேகத்தால்  மூடிக்கொண்டீர்.  {Lam  3:44}

 

ஜனங்களுக்குள்ளே  எங்களைக்  குப்பையும்  அருவருப்புமாக்கினீர்.  {Lam  3:45}

 

எங்கள்  பகைஞர்  எல்லாரும்  எங்களுக்கு  விரோதமாய்த்  தங்கள்  வாயைத்  திறந்தார்கள்.  {Lam  3:46}

 

திகிலும்  படுகுழியும்  பாழ்க்கடிப்பும்  சங்காரமும்  எங்களுக்கு  நேரிட்டது.  {Lam  3:47}

 

என்  ஜனமாகிய  குமாரத்தி  அடைந்த  கேட்டினிமித்தம்  என்  கண்களிலிருந்து  நீர்க்கால்கள்  பாய்கிறது.  {Lam  3:48}

 

கர்த்தர்  பரலோகத்திலிருந்து  நோக்கிப்பார்க்குமட்டும்,  {Lam  3:49}

 

என்  கண்  இடைவிடாமல்  ஓய்வின்றிச்  சொரிகிறது.  {Lam  3:50}

 

என்  நகரத்தினுடைய  குமாரத்திகள்  அனைவரினிமித்தமும்,  என்  கண்  என்  ஆத்துமாவுக்கு  நோவுண்டாக்குகிறது.  {Lam  3:51}

 

முகாந்தரம்  இல்லாமல்  என்னைப்  பகைக்கிறவர்கள்  என்னை  ஒரு  பட்சியைப்போல  வேட்டையாடினார்கள்.  {Lam  3:52}

 

காவற்கிடங்கிலே  என்  பிராணனை  ஒடுக்கி,  என்மீதில்  கல்லை  வைத்தார்கள்.  {Lam  3:53}

 

தண்ணீர்  என்  தலையின்மேல்  புரண்டது;  நாசமானேன்  என்றேன்.  {Lam  3:54}

 

மகா  ஆழமான  கிடங்கிலிருந்து,  கர்த்தாவே,  உம்முடைய  நாமத்தைப்பற்றிக்  கூப்பிட்டேன்.  {Lam  3:55}

 

என்  சத்தத்தைக்  கேட்டீர்;  என்  பெருமூச்சுக்கும்  என்  கூப்பிடுதலுக்கும்  உமது  செவியை  அடைத்துக்கொள்ளாதேயும்.  {Lam  3:56}

 

நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிட்ட  நாளிலே  நீர்  அணுகி:  பயப்படாதே  என்றீர்.  {Lam  3:57}

 

ஆண்டவரே,  என்  ஆத்துமாவின்  வழக்கை  நடத்தினீர்;  என்  பிராணனை  மீட்டுக்கொண்டீர்.  {Lam  3:58}

 

கர்த்தாவே,  எனக்கு  உண்டான  அநியாயத்தைக்  கண்டீர்;  என்  நியாயத்தைத்  தீரும்.  {Lam  3:59}

 

அவர்களுடைய  எல்லாக்  குரோதத்தையும்,  அவர்கள்  எனக்கு  விரோதமாக  நினைத்த  எல்லா  நினைவுகளையும்  கண்டீர்.  {Lam  3:60}

 

கர்த்தாவே,  அவர்கள்  நிந்திக்கும்  நிந்தையையும்,  அவர்கள்  எனக்கு  விரோதமாய்  நினைத்த  எல்லா  நினைவுகளையும்,  {Lam  3:61}

 

எனக்கு  விரோதமாய்  எழும்பினவர்களின்  வாய்மொழிகளையும்,  அவர்கள்  நாள்முழுதும்  எனக்கு  விரோதமாய்  யோசிக்கும்  யோசனைகளையும்  கேட்டீர்.  {Lam  3:62}

 

அவர்கள்  உட்கார்ந்திருப்பதையும்  அவர்கள்  எழுந்திருப்பதையும்  நோக்கிப்பாரும்;  நான்  அவர்களுடைய  பாடலாயிருக்கிறேன்.  {Lam  3:63}

 

கர்த்தாவே,  அவர்கள்  கைகள்  செய்த  கிரியைகளுக்குத்தக்கதாக  அவர்களுக்குப்  பலன்  அளிப்பீர்.  {Lam  3:64}

 

அவர்களுக்கு  இருதய  வேதனையைக்  கொடுப்பீர்,  உம்முடைய  சாபம்  அவர்கள்மேல்  இருக்கும்.  {Lam  3:65}

 

கோபமாய்  அவர்களைப்  பின்தொடர்ந்து  கர்த்தருடைய  வானங்களின்  கீழ்  இராதபடிக்கு  அவர்களை  அழித்துவிடுவீர்.  {Lam  3:66}

 

ஐயோ!  பொன்  மங்கி,  பசும்பொன்மாறி,  பரிசுத்த  ஸ்தலத்தின்  கற்கள்  சகல  வீதிகளின்  முனையிலும்  கொட்டுண்டுபோயிற்றே.  {Lam  4:1}

 

ஐயோ!  தங்கத்துக்கொப்பான  விலையேறப்பெற்ற  சீயோன்<Zion>  குமாரர்  குயவனுடைய  கைவேலையான  மண்பாண்டங்களாய்  எண்ணப்படுகிறார்களே.  {Lam  4:2}

 

திமிங்கிலங்கள்  முதலாய்க்  கொங்கைகளை  நீட்டி,  தங்கள்  குட்டிகளுக்குப்  பால்  கொடுக்கும்;  என்  ஜனமாகிய  குமாரத்தியோ  வனாந்தரத்திலுள்ள  தீக்குருவியைப்போல்  குரூரமாயிருக்கிறாளே.  {Lam  4:3}

 

குழந்தைகளின்  நாவு  தாகத்தால்  மேல்வாயோடே  ஒட்டிக்கொண்டிருக்கிறது;  பிள்ளைகள்  அப்பங்கேட்கிறார்கள்,  அவர்களுக்குக்  கொடுப்பாரில்லை.  {Lam  4:4}

 

ருசியான  பதார்த்தங்களைச்  சாப்பிட்டவர்கள்  வீதிகளில்  பாழாய்க்கிடக்கிறார்கள்;  இரத்தாம்பரம்  உடுத்தி  வளர்ந்தவர்கள்  குப்பைமேடுகளை  அணைத்துக்  கொள்ளுகிறார்கள்.  {Lam  4:5}

 

கைச்செய்கை  இல்லாமல்  ஒரு  நிமிஷத்திலே  கவிழ்க்கப்பட்ட  சோதோமின்<Sodom>  பாவத்துக்கு  வந்த  தண்டனையைப்பார்க்கிலும்  என்  ஜனமாகிய  குமாரத்தியின்  அக்கிரமத்துக்கு  வந்த  தண்டனை  பெரிதாயிருக்கிறது.  {Lam  4:6}

 

அவளுடைய  நசரேயர்<Nazarites>  உறைந்த  மழையைப்பார்க்கிலும்  சுத்தமும்,  பாலைப்பார்க்கிலும்  வெண்மையும்,  பவளத்தைப்பார்க்கிலும்  சிவப்பும்,  இந்திரநீலத்தைப்பார்க்கிலும்  மேனியுமாயிருந்தார்கள்.  {Lam  4:7}

 

இப்பொழுதோ  அவர்களுடைய  முகம்  கரியிலும்  கறுத்துப்போயிற்று;  வீதிகளில்  அறியப்படார்கள்;  அவர்கள்  தோல்  அவர்கள்  எலும்புகளோடு  ஒட்டிக்கொண்டு,  காய்ந்த  மரத்துக்கு  ஒப்பாயிற்று.  {Lam  4:8}

 

பசியினால்  கொலையுண்டவர்களைப்பார்க்கிலும்  பட்டயத்தால்  கொலையுண்டவர்கள்  பாக்கியவான்களாயிருக்கிறார்கள்;  அவர்கள்  வயலின்  வரத்தில்லாமையால்  குத்துண்டு,  கரைந்துபோகிறார்கள்.  {Lam  4:9}

 

இரக்கமுள்ள  ஸ்திரீகளின்  கைகள்  தங்கள்  பிள்ளைகளைச்  சமைத்தன,  என்  ஜனமாகிய  குமாரத்தியின்  அழிவில்  அவைகள்  அவர்களுக்கு  ஆகாரமாயின.  {Lam  4:10}

 

கர்த்தர்  தமது  கோபத்தை  நிறைவேற்றி,  தமது  உக்கிரகோபத்தை  ஊற்றி,  சீயோனில்<Zion>  அக்கினியைக்  கொளுத்தினார்;  அது  அதின்  அஸ்திபாரங்களைப்  பட்சித்துப்போட்டது.  {Lam  4:11}

 

சத்துருவும்  பகைஞனும்  எருசலேமின்<Jerusalem>  வாசல்களுக்குள்  பிரவேசிப்பான்  என்கிறதைப்  பூமியின்  ராஜாக்களும்  பூச்சக்கரத்தின்  சகல  குடிகளும்  நம்பமாட்டாதிருந்தார்கள்.  {Lam  4:12}

 

அதின்  நடுவில்  நீதிமான்களின்  இரத்தத்தைச்  சிந்தின  அதின்  தீர்க்கதரிசிகளின்  பாவங்களினாலும்,  அதின்  ஆசாரியர்களின்  அக்கிரமங்களினாலும்  இப்படி  வந்தது.  {Lam  4:13}

 

குருடர்போல  வீதிகளில்  அலைந்து,  ஒருவரும்  அவர்கள்  வஸ்திரங்களைத்  தொடக்கூடாதபடி  இரத்தத்தால்  கறைப்பட்டிருந்தார்கள்.  {Lam  4:14}

 

விலகுங்கள்,  தீட்டுப்பட்டவர்களே,  தொடாமல்  விலகுங்கள்,  விலகுங்கள்,  என்று  அவர்களை  நோக்கிக்  கூப்பிட்டார்கள்;  மெய்யாய்ப்  பறந்தோடி  அலைந்து  போனார்கள்;  இனித்  தங்கித்  தரிக்கமாட்டார்கள்  என்று  புறஜாதிகளுக்குள்ளே  சொல்லப்பட்டது.  {Lam  4:15}

 

கர்த்தருடைய  கோபம்  அவர்களைச்  சிதறடித்தது,  அவர்களை  இனி  அவர்  நோக்கார்;  ஆசாரியருடைய  முகத்தைப்  பாராமலும்  முதியோரை  மதியாமலும்போனார்கள்.  {Lam  4:16}

 

இன்னும்  எங்களுக்குச்  சகாயம்  வருமென்று  நாங்கள்  வீணாய்  எதிர்பார்த்திருந்ததினாலே  எங்கள்  கண்கள்  பூத்துப்போயின;  இரட்சிக்கமாட்டாத  ஜாதிக்கு  எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.  {Lam  4:17}

 

நாங்கள்  எங்கள்  வீதிகளில்  நடவாதபடிக்கு  எங்கள்  அடிச்சுவடுகளை  வேட்டையாடினார்கள்;  எங்கள்  முடிவு  சமீபித்தது;  எங்கள்  நாட்கள்  நிறைவேறிப்போயின;  எங்கள்  முடிவு  வந்துவிட்டது.  {Lam  4:18}

 

எங்களைப்  பின்தொடர்ந்தவர்கள்  ஆகாயத்துக்  கழுகுகளைப்பார்க்கிலும்  வேகமாயிருந்தார்கள்;  பர்வதங்கள்மேல்  எங்களைப்  பின்தொடர்ந்தார்கள்;  வனாந்தரத்தில்  எங்களுக்குப்  பதிவிருந்தார்கள்.  {Lam  4:19}

 

கர்த்தரால்  அபிஷேகம்பண்ணப்பட்டவனும்,  எங்கள்  நாசியின்  சுவாசமாயிருந்தவனும்  அவர்களுடைய  படுகுழியில்  அகப்பட்டான்;  அவனுடைய  நிழலிலே  ஜாதிகளுக்குள்ளே  பிழைத்திருப்போம்  என்று  அவனைக்குறித்துச்  சொல்லியிருந்தோமே.  {Lam  4:20}

 

ஊத்ஸ்தேசவாசியாகிய<Uz>  ஏதோம்<Edom>  குமாரத்தியே,  சந்தோஷித்துக்  களிகூரு;  பாத்திரம்  உன்னிடத்திற்கும்  தாண்டிவரும்,  அப்பொழுது  நீ  வெறித்து,  மானபங்கமாய்க்  கிடப்பாய்.  {Lam  4:21}

 

சீயோன்<Zion>  குமாரத்தியே,  உன்  அக்கிரமத்துக்கு  வரும்  தண்டனை  தீர்ந்தது;  அவர்  இனி  உன்னை  அப்புறம்  சிறைப்பட்டுப்போகவிடார்;  ஏதோம்<Edom>  குமாரத்தியே,  உன்  அக்கிரமத்தை  அவர்  விசாரிப்பார்;  உன்  பாவங்களை  வெளிப்படுத்துவார்.  {Lam  4:22}

 

கர்த்தாவே,  எங்களுக்கு  நேரிட்டதை  நினைத்தருளும்;  எங்கள்  நிந்தையை  நோக்கிப்பாரும்.  {Lam  5:1}

 

எங்கள்  சுதந்தரம்  அந்நியர்  வசமாகவும்,  எங்கள்  வீடுகள்  புறத்தேசத்தார்வசமாகவும்  தாண்டிப்போயின.  {Lam  5:2}

 

திக்கற்றவர்களானோம்,  தகப்பன்  இல்லை;  எங்கள்  தாய்கள்  விதவைகளைப்போல  இருக்கிறார்கள்.  {Lam  5:3}

 

எங்கள்  தண்ணீரைப்  பணத்துக்கு  வாங்கிக்  குடிக்கிறோம்;  எங்கள்  விறகு  விலைக்கிரயமாய்  வருகிறது.  {Lam  5:4}

 

பாரஞ்சுமந்து  எங்கள்  கழுத்து  நோகிறது;  நாங்கள்  உழைக்கிறோம்,  எங்களுக்கு  இளைப்பாறுதல்  இல்லை.  {Lam  5:5}

 

அப்பத்தால்  திருப்தியாகும்படி  எகிப்தியருக்கும்<Egyptians>  அசீரியருக்கும்<Assyrians>  எங்களைக்  கையளித்தோம்.  {Lam  5:6}

 

எங்கள்  பிதாக்கள்  பாவஞ்செய்து  மாண்டுபோனார்கள்;  நாங்கள்  அவர்களுடைய  அக்கிரமங்களைச்  சுமக்கிறோம்.  {Lam  5:7}

 

அடிமைகள்  எங்களை  ஆளுகிறார்கள்;  எங்களை  அவர்கள்  கையிலிருந்து  விடுவிப்பாரில்லை.  {Lam  5:8}

 

வனாந்தரத்தில்  இருக்கிற  பட்டயத்தினால்  பிராணமோசத்துக்கு  ஏதுவானவர்களாய்  எங்கள்  அப்பத்தைத்  தேடுகிறோம்.  {Lam  5:9}

 

பஞ்சத்தின்  கொடுமையினால்  எங்கள்  தோல்  அடுப்பங்கரையைப்போல்  கறுத்துப்போயிற்று.  {Lam  5:10}

 

சீயோனில்<Zion>  இருந்த  ஸ்திரீகளையும்  யூதா<Judah>  பட்டணங்களில்  இருந்த  கன்னிகைகளையும்  அவமானப்படுத்தினார்கள்.  {Lam  5:11}

 

பிரபுக்களுடைய  கைகளை  அவர்கள்  கட்டி,  அவர்களை  ஏறத்தூக்கினார்கள்;  முதியோரின்  முகங்கள்  மதிக்கப்படவில்லை.  {Lam  5:12}

 

வாலிபரை  ஏந்திரம்  அரைக்கக்  கொண்டுபோகிறார்கள்;  இளைஞர்  விறகு  சுமந்து  இடறிவிழுகிறார்கள்.  {Lam  5:13}

 

முதியோர்கள்  வாசல்களில்  உட்காருகிறதும்,  வாலிபர்  கின்னரங்களை  வாசிக்கிறதும்  நின்றுபோயிற்று.  {Lam  5:14}

 

எங்கள்  இருதயத்தின்  களிகூருதல்  ஒழிந்துபோயிற்று;  எங்கள்  சந்தோஷம்  துக்கமாய்  மாறிற்று.  {Lam  5:15}

 

எங்கள்  தலையிலிருந்து  கிரீடம்  விழுந்தது;  ஐயோ!  நாங்கள்  பாவஞ்செய்தோமே.  {Lam  5:16}

 

அதினால்  எங்கள்  இருதயம்  பலட்சயமாயிற்று;  அதினால்  எங்கள்  கண்கள்  இருண்டுபோயின.  {Lam  5:17}

 

பாழாய்க்கிடக்கிற  சீயோன்<Zion>  மலையின்மேல்  நரிகள்  ஓடித்திரிகிறது.  {Lam  5:18}

 

கர்த்தாவே,  நீர்  என்றென்றைக்கும்  இருக்கிறீர்;  உம்முடைய  சிங்காசனம்  தலைமுறை  தலைமுறையாக  நிலைநிற்கும்.  {Lam  5:19}

 

தேவரீர்  என்றைக்கும்  எங்களை  மறந்து,  நெடுங்காலமாக  எங்களைக்  கைவிட்டிருப்பதென்ன?  {Lam  5:20}

 

கர்த்தாவே,  எங்களை  உம்மிடத்தில்  திருப்பிக்கொள்ளும்,  அப்பொழுது  திரும்புவோம்;  பூர்வகாலத்திலிருந்ததுபோல  எங்கள்  நாட்களைப்  புதியவைகளாக்கும்.  {Lam  5:21}

 

எங்களை  முற்றிலும்  வெறுத்துவிடுவீரோ?  எங்கள்பேரில்  கடுங்கோபமாயிருக்கிறீரே!  {Lam  5:22}

 

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!