Saturday, December 14, 2019

2 கொரிந்தியர்

தேவனுடைய  சித்தத்தினாலே  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  அப்போஸ்தலனாகிய  பவுலும்<Paul>,  சகோதரனாகிய  தீமோத்தேயும்<Timothy>,  கொரிந்துபட்டணத்திலுள்ள<Corinth>  தேவனுடைய  சபைக்கும்,  அகாயாநாடெங்குமுள்ள<Achaia>  எல்லாப்  பரிசுத்தவான்களுக்கும்  எழுதுகிறதாவது:  {2Cor  1:1}

 

நம்முடைய  பிதாவாகிய  தேவனாலும்,  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலும்<Jesus  Christ>,  உங்களுக்குக்  கிருபையும்  சமாதானமும்  உண்டாவதாக.  {2Cor  1:2}

 

நமது  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  பிதாவாகிய  தேவனும்,  இரக்கங்களின்  பிதாவும்,  சகலவிதமான  ஆறுதலின்  தேவனுமாயிருக்கிறவருக்கு  ஸ்தோத்திரம்.  {2Cor  1:3}

 

தேவனால்  எங்களுக்கு  அருளப்படுகிற  ஆறுதலினாலே,  எந்த  உபத்திரவத்திலாகிலும்  அகப்படுகிறவர்களுக்கு  நாங்கள்  ஆறுதல்செய்யத்  திராணியுள்ளவர்களாகும்படி,  எங்களுக்கு  வரும்  சகல  உபத்திரவங்களிலேயும்  அவரே  எங்களுக்கு  ஆறுதல்செய்கிறவர்.  {2Cor  1:4}

 

எப்படியெனில்,  கிறிஸ்துவினுடைய<Christ>  பாடுகள்  எங்களிடத்தில்  பெருகுகிறதுபோல,  கிறிஸ்துவினாலே<Christ>  எங்களுக்கு  ஆறுதலும்  பெருகுகிறது.  {2Cor  1:5}

 

ஆதலால்,  நாங்கள்  உபத்திரவப்பட்டாலும்  அது  உங்கள்  ஆறுதலுக்கும்  இரட்சிப்புக்கும்  ஏதுவாகும்;  நாங்கள்  ஆறுதலடைந்தாலும்  அதுவும்  உங்கள்  ஆறுதலுக்கும்  இரட்சிப்புக்கும்  ஏதுவாகும்;  நாங்கள்  பாடுபடுகிறதுபோல  நீங்களும்  பாடுபட்டுச்  சகிக்கிறதினாலே  அந்த  இரட்சிப்பு  பலன்செய்கிறது.  {2Cor  1:6}

 

நீங்கள்  எங்களோடேகூடப்  பாடுபடுகிறதுபோல,  எங்களோடேகூட  ஆறுதலும்  அடைகிறீர்களென்று  நாங்கள்  அறிந்து,  உங்களைக்குறித்து  உறுதியான  நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.  {2Cor  1:7}

 

ஆகையால்  சகோதரரே,  ஆசியாவில்<Asia>  எங்களுக்கு  நேரிட்ட  உபத்திரவத்தை  நீங்கள்  அறியாதிருக்க  எங்களுக்கு  மனதில்லை.  என்னவெனில்,  பிழைப்போம்  என்கிற  நம்பிக்கை  அற்றுப்போகத்தக்கதாக,  எங்கள்  பலத்திற்கு  மிஞ்சின  அதிக  பாரமான  வருத்தம்  எங்களுக்கு  உண்டாயிற்று.  {2Cor  1:8}

 

நாங்கள்  எங்கள்மேல்  நம்பிக்கையாயிராமல்,  மரித்தோரை  எழுப்புகிற  தேவன்மேல்  நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக,  மரணம்  வருமென்று  நாங்கள்  எங்களுக்குள்ளே  நிச்சயித்திருந்தோம்.  {2Cor  1:9}

 

அப்படிப்பட்ட  மரணத்தினின்றும்  அவர்  எங்களைத்  தப்புவித்தார்,  இப்பொழுதும்  தப்புவிக்கிறார்,  இன்னும்  தப்புவிப்பார்  என்று  அவரை  நம்பியிருக்கிறோம்.  {2Cor  1:10}

 

அநேகர்மூலமாய்  எங்களுக்கு  உண்டான  தயவுக்காக  அநேகரால்  எங்கள்  நிமித்தம்  ஸ்தோத்திரங்கள்  செலுத்தப்படும்பொருட்டு,  நீங்களும்  விண்ணப்பத்தினால்  எங்களுக்கு  உதவிசெய்யுங்கள்.  {2Cor  1:11}

 

மாம்சத்திற்கேற்ற  ஞானத்தோடே  நடவாமல்,  தேவனுடைய  கிருபையினால்  நாங்கள்  உலகத்திலேயும்,  விசேஷமாக  உங்களிடத்திலேயும்,  கபடமில்லாமல்  திவ்விய  உண்மையோடே  நடந்தோமென்று,  எங்கள்  மனது  எங்களுக்குச்  சொல்லுஞ்சாட்சியே  எங்கள்  புகழ்ச்சியாயிருக்கிறது.  {2Cor  1:12}

 

ஏனென்றால்,  நீங்கள்  வாசித்தும்  ஒத்துக்கொண்டுமிருக்கிற  காரியங்களையேயன்றி,  வேறொன்றையும்  நாங்கள்  உங்களுக்கு  எழுதவில்லை;  முடிவுபரியந்தமும்  அப்படியே  ஒத்துக்கொள்வீர்களென்று  நம்பியிருக்கிறேன்.  {2Cor  1:13}

 

கர்த்தராகிய  இயேசுவினுடைய<Jesus>  நாளிலே  நீங்கள்  எங்களுக்குப்  புகழ்ச்சியாயிருப்பதுபோல,  நாங்களும்  உங்களுக்குப்  புகழ்ச்சியாயிருக்கிறதை  ஒருவாறு  ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.  {2Cor  1:14}

 

நான்  இப்படிப்பட்ட  நம்பிக்கையைக்  கொண்டிருக்கிறபடியினால்,  உங்களுக்கு  இரண்டாந்தரமும்  பிரயோஜனமுண்டாகும்படி,  முதலாவது  உங்களிடத்தில்  வரவும்,  {2Cor  1:15}

 

பின்பு  உங்கள்  ஊர்வழியாய்  மக்கெதோனியா<Macedonia>  நாட்டுக்குப்  போகவும்,  மக்கெதோனியாவை<Macedonia>  விட்டு  மறுபடியும்  உங்களிடத்திற்கு  வரவும்,  உங்களால்  யூதேயாதேசத்துக்கு<Judaea>  வழிவிட்டனுப்பப்படவும்  யோசனையாயிருந்தேன்.  {2Cor  1:16}

 

இப்படி  நான்  யோசித்தது  வீணாக  யோசித்தேனோ?  அல்லது  ஆம்  ஆம்  என்கிறதும்,  அல்ல  அல்ல  என்கிறதும்,  என்னிடத்திலே  இருக்கத்தக்கதாக,  நான்  யோசிக்கிறவைகளை  மாம்சத்தின்படி  யோசிக்கிறேனோ?  {2Cor  1:17}

 

நாங்கள்  உங்களுக்குச்  சொன்ன  வார்த்தை  ஆம்  அல்ல  என்று  இருக்கவில்லை;  அதற்கு  உண்மையுள்ள  தேவனே  சாட்சி.  {2Cor  1:18}

 

என்னாலும்,  சில்வானுவினாலும்<Silvanus>,  தீமோத்தேயுவினாலும்<Timotheus>,  உங்களுக்குள்ளே  பிரசங்கிக்கப்பட்ட  தேவகுமாரனாகிய  இயேசுகிறிஸ்துவும்<Jesus  Christ>  ஆம்  என்றும்  அல்ல  என்றும்  இராமல்,  ஆம்  என்றே  இருக்கிறார்.  {2Cor  1:19}

 

எங்களால்  தேவனுக்கு  மகிமையுண்டாகும்படி,  தேவனுடைய  வாக்குத்தத்தங்களெல்லாம்  இயேசுகிறிஸ்துவுக்குள்<Jesus  Christ>  ஆம்  என்றும்,  அவருக்குள்  ஆமென்  என்றும்  இருக்கிறதே.  {2Cor  1:20}

 

உங்களோடேகூட  எங்களையும்  கிறிஸ்துவுக்குள்<Christ>  ஸ்திரப்படுத்தி,  நம்மை  அபிஷேகம்பண்ணினவர்  தேவனே.  {2Cor  1:21}

 

அவர்  நம்மை  முத்திரித்து,  நம்முடைய  இருதயங்களில்  ஆவியென்னும்  அச்சாரத்தையும்  கொடுத்திருக்கிறார்.  {2Cor  1:22}

 

மேலும்  நான்  உங்களைத்  தப்பவிடும்படிக்கே  இதுவரைக்கும்  கொரிந்துபட்டணத்திற்கு<Corinth>  வராதிருக்கிறேனென்று,  என்  ஆத்துமாவின்பேரில்  தேவனையே  சாட்சியாகக்  கோருகிறேன்.  {2Cor  1:23}

 

உங்கள்  விசுவாசத்திற்கு  நாங்கள்  அதிகாரிகளாயிராமல்,  உங்கள்  சந்தோஷத்திற்குச்  சகாயராயிருக்கிறோம்;  விசுவாசத்தினாலே  நிலைநிற்கிறீர்களே.  {2Cor  1:24}

 

நான்  துக்கத்துடனே  உங்களிடத்தில்  மறுபடியும்  வராதபடிக்கு  எனக்குள்ளே  தீர்மானித்துக்கொண்டேன்.  {2Cor  2:1}

 

நான்  உங்களைத்  துக்கப்படுத்தினால்,  என்னாலே  துக்கமடைந்தவனேயல்லாமல்,  எவன்  என்னைச்  சந்தோஷப்படுத்துவான்?  {2Cor  2:2}

 

என்னுடைய  சந்தோஷம்  உங்களெல்லாருக்கும்  சந்தோஷமாயிருக்குமென்று,  நான்  உங்களெல்லாரையும்பற்றி  நம்பிக்கையுள்ளவனாயிருந்து,  நான்  வரும்போது,  என்னைச்  சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால்  நான்  துக்கமடையாதபடிக்கு,  அதை  உங்களுக்கு  எழுதினேன்.  {2Cor  2:3}

 

அன்றியும்,  நீங்கள்  துக்கப்படும்படிக்கு  எழுதாமல்,  உங்கள்மேல்  நான்  வைத்த  அன்பின்  மிகுதியை  நீங்கள்  அறியும்படிக்கே,  மிகுந்த  வியாகுலமும்  மன  இடுக்கமும்  அடைந்தவனாய்  அதிகக்  கண்ணீரோடே  உங்களுக்கு  எழுதினேன்.  {2Cor  2:4}

 

துக்கமுண்டாக்கினவன்  எனக்குமாத்திரமல்ல,  ஒருவாறு  உங்களெல்லாருக்கும்  துக்கமுண்டாக்கினான்;  நான்  உங்கள்  எல்லார்மேலும்  அதிக  பாரஞ்சுமத்தாதபடிக்கு  இதைச்  சொல்லுகிறேன்.  {2Cor  2:5}

 

அப்படிப்பட்டவனுக்கு  அநேகரால்  உண்டான  இந்த  தண்டனையே  போதும்.  {2Cor  2:6}

 

ஆதலால்  அவன்  அதிக  துக்கத்தில்  அமிழ்ந்துபோகாதபடிக்கு,  நீங்கள்  அவனுக்கு  மன்னித்து  ஆறுதல்செய்யவேண்டும்.  {2Cor  2:7}

 

அந்தப்படி,  உங்கள்  அன்பை  அவனுக்குக்  காண்பிக்கும்படி  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {2Cor  2:8}

 

நீங்கள்  எல்லாவற்றிலேயும்  கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ  என்று  உங்களைச்  சோதித்தறியும்படி  இப்படி  எழுதினேன்.  {2Cor  2:9}

 

எவனுக்கு  நீங்கள்  மன்னிக்கிறீர்களோ,  அவனுக்கு  நானும்  மன்னிக்கிறேன்;  மேலும்  எதை  நான்  மன்னித்திருக்கிறேனோ,  அதை  உங்கள்நிமித்தம்  கிறிஸ்துவினுடைய<Christ>  சந்நிதானத்திலே  மன்னித்திருக்கிறேன்.  {2Cor  2:10}

 

சாத்தானாலே  நாம்  மோசம்போகாதபடிக்கு  அப்படிச்  செய்தேன்;  அவனுடைய  தந்திரங்கள்  நமக்குத்  தெரியாதவைகள்  அல்லவே.  {2Cor  2:11}

 

மேலும்  நான்  கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கும்படி  துரோவாபட்டணத்தில்<Troas>  வந்தபோது,  கர்த்தராலே  எனக்குக்  கதவு  திறக்கப்பட்டிருக்கையில்,  {2Cor  2:12}

 

நான்  என்  சகோதரனாகிய  தீத்துவைக்<Titus>  காணாததினாலே,  என்  ஆவிக்கு  அமைதலில்லாதிருந்தது.  ஆதலால்  நான்  அவர்களிடத்தில்  அனுப்புவித்துக்கொண்டு,  மக்கெதோனியா<Macedonia>  நாட்டுக்குப்  புறப்பட்டுப்போனேன்.  {2Cor  2:13}

 

கிறிஸ்துவுக்குள்<Christ>  எப்பொழுதும்  எங்களை  வெற்றிசிறக்கப்பண்ணி,  எல்லா  இடங்களிலேயும்  எங்களைக்கொண்டு  அவரை  அறிகிற  அறிவின்  வாசனையை  வெளிப்படுத்துகிற  தேவனுக்கு  ஸ்தோத்திரம்.  {2Cor  2:14}

 

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும்,  கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும்,  நாங்கள்  தேவனுக்குக்  கிறிஸ்துவின்<Christ>  நற்கந்தமாயிருக்கிறோம்.  {2Cor  2:15}

 

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே  மரணத்திற்கேதுவான  மரணவாசனையாகவும்,  இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே  ஜீவனுக்கேதுவான  ஜீவவாசனையாகவும்  இருக்கிறோம்.  இவைகளை  நடப்பிக்கிறதற்கு  எவன்  தகுதியானவன்?  {2Cor  2:16}

 

அநேகரைப்போல,  நாங்கள்  தேவவசனத்தைக்  கலப்பாய்ப்  பேசாமல்,  துப்புரவாகவும்,  தேவனால்  அருளப்பட்டபிரகாரமாகவும்,  கிறிஸ்துவுக்குள்<Christ>  தேவசந்நிதியில்  பேசுகிறோம்.  {2Cor  2:17}

 

எங்களை  நாங்களே  மறுபடியும்  மெச்சிக்கொள்ளத்  தொடங்குகிறோமோ?  அல்லது  சிலருக்கு  வேண்டியதாயிருக்கிறதுபோல,  உங்களுக்கு  உபசார  நிருபங்களை  அனுப்பவும்,  உங்களிடத்தில்  உபசார  நிருபங்களைப்  பெற்றுக்கொள்ளவும்  எங்களுக்கு  வேண்டியதோ?  {2Cor  3:1}

 

எங்கள்  இருதயங்களில்  எழுதப்பட்டும்,  சகல  மனுஷராலும்  அறிந்து  வாசிக்கப்பட்டும்  இருக்கிற  எங்கள்  நிருபம்  நீங்கள்தானே.  {2Cor  3:2}

 

ஏனெனில்  நீங்கள்  எங்கள்  ஊழியத்தினால்  உண்டாகிய  கிறிஸ்துவின்<Christ>  நிருபமாயிருக்கிறீர்களென்று  வெளியரங்கமாயிருக்கிறது;  அது  மையினாலல்ல,  ஜீவனுள்ள  தேவனுடைய  ஆவியினாலும்;  கற்பலகைகளிலல்ல,  இருதயங்களாகிய  சதையான  பலகைகளிலேயும்  எழுதப்பட்டிருக்கிறது.  {2Cor  3:3}

 

நாங்கள்  தேவனுக்கு  முன்பாகக்  கிறிஸ்துவின்<Christ>  மூலமாய்  இப்படிப்பட்ட  நம்பிக்கையைக்  கொண்டிருக்கிறோம்.  {2Cor  3:4}

 

எங்களால்  ஏதாகிலும்  ஆகும்  என்பதுபோல  ஒன்றை  யோசிக்கிறதற்கு  நாங்கள்  எங்களாலே  தகுதியானவர்கள்  அல்ல;  எங்களுடைய  தகுதி  தேவனால்  உண்டாயிருக்கிறது.  {2Cor  3:5}

 

புது  உடன்படிக்கையின்  ஊழியக்காரராயிருக்கும்படி,  அவரே  எங்களைத்  தகுதியுள்ளவர்களாக்கினார்;  அந்த  உடன்படிக்கை  எழுத்திற்குரியதாயிராமல்,  ஆவிக்குரியதாயிருக்கிறது;  எழுத்து  கொல்லுகிறது,  ஆவியோ  உயிர்ப்பிக்கிறது.  {2Cor  3:6}

 

எழுத்துக்களினால்  எழுதப்பட்டுக்  கற்களில்  பதிந்திருந்த  மரணத்துக்கேதுவான  ஊழியத்தைச்  செய்த  மோசேயினுடைய<Moses>  முகத்திலே  மகிமைப்பிரகாசம்  உண்டானபடியால்,  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  அவன்  முகத்தை  நோக்கிப்  பார்க்கக்கூடாதிருந்தார்களே.  {2Cor  3:7}

 

ஒழிந்துபோகிற  மகிமையையுடைய  அந்த  ஊழியம்  அப்படிப்பட்ட  மகிமையுள்ளதாயிருந்தால்,  ஆவிக்குரிய  ஊழியம்  எவ்வளவு  அதிக  மகிமையுள்ளதாயிருக்கும்?  {2Cor  3:8}

 

ஆக்கினைத்தீர்ப்புக்  கொடுக்கும்  ஊழியம்  மகிமையுள்ளதாயிருந்தால்,  நீதியைக்  கொடுக்கும்  ஊழியம்  அதிக  மகிமையுள்ளதாயிருக்குமே.  {2Cor  3:9}

 

இப்படியாக,  மகிமைப்பட்டிருந்த  அந்த  ஊழியம்  இந்த  ஊழியத்திற்கு  உண்டாயிருக்கிற  சிறந்த  மகிமைக்குமுன்பாக  மகிமைப்பட்டதல்ல.  {2Cor  3:10}

 

அன்றியும்  ஒழிந்துபோவதே  மகிமையுள்ளதாயிருந்ததானால்,  நிலைத்திருப்பது  அதிக  மகிமையுள்ளதாயிருக்குமே.  {2Cor  3:11}

 

நாங்கள்  இப்படிப்பட்ட  நம்பிக்கையை  உடையவர்களாதலால்,  மிகவும்  தாராளமாய்ப்  பேசுகிறோம்.  {2Cor  3:12}

 

மேலும்  ஒழிந்துபோவதின்  முடிவை  இஸ்ரவேல்<Israel>  புத்திரர்  நோக்கிப்பாராதபடிக்கு,  மோசே<Moses>  தன்  முகத்தின்மேல்  முக்காடு  போட்டுக்கொண்டதுபோல  நாங்கள்  போடுகிறதில்லை.  {2Cor  3:13}

 

அவர்களுடைய  மனது  கடினப்பட்டது;  இந்நாள்வரைக்கும்  பழைய  ஏற்பாடு  வாசிக்கப்படுகையில்,  அந்த  முக்காடு  நீங்காமலிருக்கிறது;  அது  கிறிஸ்துவினாலே<Christ>  நீக்கப்படுகிறது.  {2Cor  3:14}

 

மோசேயின்<Moses>  ஆகமங்கள்  வாசிக்கப்படும்போது,  இந்நாள்வரைக்கும்  முக்காடு  அவர்கள்  இருதயத்தின்மேல்  இருக்கிறதே.  {2Cor  3:15}

 

அவர்கள்  கர்த்தரிடத்தில்  மனந்திரும்பும்போது,  அந்த  முக்காடு  எடுபட்டுப்போம்.  {2Cor  3:16}

 

கர்த்தரே  ஆவியானவர்;  கர்த்தருடைய  ஆவி  எங்கேயோ  அங்கே  விடுதலையுமுண்டு.  {2Cor  3:17}

 

நாமெல்லாரும்  திறந்த  முகமாய்க்  கர்த்தருடைய  மகிமையைக்  கண்ணாடியிலே  காண்கிறதுபோலக்  கண்டு,  ஆவியாயிருக்கிற  கர்த்தரால்  அந்தச்  சாயலாகத்தானே  மகிமையின்மேல்  மகிமையடைந்து  மறுரூபப்படுகிறோம்.  {2Cor  3:18}

 

இப்படிப்பட்ட  ஊழியத்தை  உடையவர்களாகிய  நாங்கள்  இரக்கம்  பெற்றிருப்பதால்  சோர்ந்துபோகிறதில்லை.  {2Cor  4:1}

 

வெட்கமான  அந்தரங்க  காரியங்களை  நாங்கள்  வெறுத்து,  தந்திரமாய்  நடவாமலும்,  தேவ  வசனத்தைப்  புரட்டாமலும்,  சத்தியத்தை  வெளிப்படுத்துகிறதினாலே  தேவனுக்கு  முன்பாக  எல்லா  மனுஷருடைய  மனச்சாட்சிக்கும்  எங்களை  உத்தமரென்று  விளங்கப்பண்ணுகிறோம்.  {2Cor  4:2}

 

எங்கள்  சுவிசேஷம்  மறைபொருளாயிருந்தால்,  கெட்டுப்போகிறவர்களுக்கே  அது  மறைபொருளாயிருக்கும்.  {2Cor  4:3}

 

தேவனுடைய  சாயலாயிருக்கிற  கிறிஸ்துவின்<Christ>  மகிமையான  சுவிசேஷத்தின்  ஒளி,  அவிசுவாசிகளாகிய  அவர்களுக்குப்  பிரகாசமாயிராதபடிக்கு,  இப்பிரபஞ்சத்தின்  தேவனானவன்  அவர்களுடைய  மனதைக்  குருடாக்கினான்.  {2Cor  4:4}

 

நாங்கள்  எங்களையே  பிரசங்கியாமல்,  கிறிஸ்து  இயேசுவைக்<Christ  Jesus>  கர்த்தரென்றும்,  எங்களையோ  இயேசுவினிமித்தம்<Jesus>  உங்கள்  ஊழியக்காரரென்றும்  பிரசங்கிக்கிறோம்.  {2Cor  4:5}

 

இருளிலிருந்து  வெளிச்சத்தைப்  பிரகாசிக்கச்சொன்ன  தேவன்  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  முகத்திலுள்ள  தமது  மகிமையின்  அறிவாகிய  ஒளியைத்  தோன்றப்பண்ணும்பொருட்டாக,  எங்கள்  இருதயங்களிலே  பிரகாசித்தார்.  {2Cor  4:6}

 

இந்த  மகத்துவமுள்ள  வல்லமை  எங்களால்  உண்டாயிராமல்,  தேவனால்  உண்டாயிருக்கிறதென்று  விளங்கும்படி,  இந்தப்  பொக்கிஷத்தை  மண்பாண்டங்களில்  பெற்றிருக்கிறோம்.  {2Cor  4:7}

 

நாங்கள்  எப்பக்கத்திலும்  நெருக்கப்பட்டும்  ஒடுங்கிப்போகிறதில்லை;  கலக்கமடைந்தும்  மனமுறிவடைகிறதில்லை;  {2Cor  4:8}

 

துன்பப்படுத்தப்பட்டும்  கைவிடப்படுகிறதில்லை;  கீழே  தள்ளப்பட்டும்  மடிந்து  போகிறதில்லை.  {2Cor  4:9}

 

கர்த்தராகிய  இயேசுவினுடைய<Jesus>  ஜீவனும்  எங்கள்  சரீரத்திலே  விளங்கும்படிக்கு,  இயேசுவின்<Jesus>  மரணத்தை  எப்பொழுதும்  எங்கள்  சரீரத்தில்  சுமந்து  திரிகிறோம்.  {2Cor  4:10}

 

எப்படியெனில்,  சாவுக்கினமான  எங்கள்  மாம்சத்திலே  இயேசுவினுடைய<Jesus>  ஜீவனும்  விளங்கும்படிக்கு  உயிரோடிருக்கிற  நாங்கள்  எப்பொழுதும்  இயேசுவினிமித்தம்<Jesus>  மரணத்திற்கு  ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.  {2Cor  4:11}

 

இப்படி  மரணமானது  எங்களிடத்திலும்,  ஜீவனானது  உங்களிடத்திலும்  பெலன்செய்கிறது.  {2Cor  4:12}

 

விசுவாசித்தேன்,  ஆகையால்  பேசினேன்  என்று  எழுதியிருக்கிறபடி,  நாங்களும்  அந்த  விசுவாசத்தின்  ஆவியை  உடையவர்களாயிருந்து,  விசுவாசிக்கிறபடியால்  பேசுகிறோம்.  {2Cor  4:13}

 

கர்த்தராகிய  இயேசுவை<Jesus>  எழுப்பினவர்  எங்களையும்  இயேசுவைக்கொண்டு<Jesus>  எழுப்பி,  உங்களுடனேகூடத்  தமக்குமுன்பாக  நிறுத்துவாரென்று  அறிந்திருக்கிறோம்.  {2Cor  4:14}

 

தேவனுடைய  மகிமை  விளங்குவதற்கேதுவாகக்  கிருபையானது  அநேகருடைய  ஸ்தோத்திரத்தினாலே  பெருகும்படிக்கு,  இவையெல்லாம்  உங்கள்நிமித்தம்  உண்டாயிருக்கிறது.  {2Cor  4:15}

 

ஆனபடியினாலே  நாங்கள்  சோர்ந்துபோகிறதில்லை;  எங்கள்  புறம்பான  மனுஷனானது  அழிந்தும்,  உள்ளான  மனுஷனானது  நாளுக்குநாள்  புதிதாக்கப்படுகிறது.  {2Cor  4:16}

 

மேலும்  காணப்படுகிறவைகளையல்ல,  காணப்படாதவைகளை  நோக்கியிருக்கிற  நமக்கு,  அதிசீக்கிரத்தில்  நீங்கும்  இலேசான  நம்முடைய  உபத்திரவம்  மிகவும்  அதிகமான  நித்திய  கனமகிமையை  உண்டாக்குகிறது.  {2Cor  4:17}

 

ஏனெனில்,  காணப்படுகிறவைகள்  அநித்தியமானவைகள்,  காணப்படாதவைகளோ  நித்தியமானவைகள்.  {2Cor  4:18}

 

பூமிக்குரிய  கூடாரமாகிய  நம்முடைய  வீடு  அழிந்துபோனாலும்,  தேவனால்  கட்டப்பட்ட  கைவேலையல்லாத  நித்திய  வீடு  பரலோகத்திலே  நமக்கு  உண்டென்று  அறிந்திருக்கிறோம்.  {2Cor  5:1}

 

ஏனெனில்,  இந்தக்  கூடாரத்திலே  நாம்  தவித்து,  நம்முடைய  பரம  வாசஸ்தலத்தைத்  தரித்துக்கொள்ள  மிகவும்  வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;  {2Cor  5:2}

 

தரித்துக்கொண்டவர்களானால்,  நிர்வாணிகளாய்க்  காணப்படமாட்டோம்.  {2Cor  5:3}

 

இந்தக்  கூடாரத்திலிருக்கிற  நாம்  பாரஞ்சுமந்து  தவிக்கிறோம்;  இந்தப்  போர்வையைக்  களைந்துபோடவேண்டுமென்று  விரும்பாமல்,  மரணமானது  ஜீவனாலே  விழுங்கப்படுவதற்காகப்  போர்வை  தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று  விரும்புகிறோம்.  {2Cor  5:4}

 

இதற்கு  நம்மை  ஆயத்தப்படுத்துகிறவர்  தேவனே;  ஆவியென்னும்  அச்சாரத்தை  நமக்குத்  தந்தவரும்  அவரே.  {2Cor  5:5}

 

நாம்  தரிசித்து  நடவாமல்,  விசுவாசித்து  நடக்கிறோம்.  {2Cor  5:6}

 

இந்தத்  தேகத்தில்  குடியிருக்கையில்  கர்த்தரிடத்தில்  குடியிராதவர்களாயிருக்கிறோமென்று  அறிந்தும்,  எப்பொழுதும்  தைரியமாயிருக்கிறோம்.  {2Cor  5:7}

 

நாம்  தைரியமாகவேயிருந்து,  இந்தத்  தேகத்தை  விட்டுக்  குடிபோகவும்  கர்த்தரிடத்தில்  குடியிருக்கவும்  அதிகமாய்  விரும்புகிறோம்.  {2Cor  5:8}

 

அதினிமித்தமே  நாம்  சரீரத்தில்  குடியிருந்தாலும்  குடியிராமற்போனாலும்  அவருக்குப்  பிரியமானவர்களாயிருக்க  நாடுகிறோம்.  {2Cor  5:9}

 

ஏனென்றால்,  சரீரத்தில்  அவனவன்  செய்த  நன்மைக்காவது  தீமைக்காவது  தக்க  பலனை  அடையும்படிக்கு,  நாமெல்லாரும்  கிறிஸ்துவின்<Christ>  நியாயாசனத்திற்கு  முன்பாக  வெளிப்படவேண்டும்.  {2Cor  5:10}

 

ஆகையால்  கர்த்தருக்குப்  பயப்படத்தக்கதென்று  அறிந்து,  மனுஷருக்குப்  புத்திசொல்லுகிறோம்;  தேவனுக்கு  முன்பாக  வெளியரங்கமாயிருக்கிறோம்;  உங்கள்  மனச்சாட்சிக்கும்  வெளியரங்கமாயிருக்கிறோம்  என்று  நம்புகிறேன்.  {2Cor  5:11}

 

இதனாலே  நாங்கள்  உங்களுக்கு  முன்பாக  எங்களை  மறுபடியும்  மெச்சிக்கொள்ளாமல்,  இருதயத்திலல்ல,  வெளிவேஷத்தில்  மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு  எதிரே  எங்களைக்குறித்து  நீங்கள்  மேன்மைபாராட்டும்படிக்கு  ஏதுவுண்டாக்குகிறோம்.  {2Cor  5:12}

 

நாங்கள்  பைத்தியங்கொண்டவர்களென்றால்  தேவனுக்காக  அப்படியிருக்கும்;  தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால்  உங்களுக்காக  அப்படியிருக்கும்.  {2Cor  5:13}

 

கிறிஸ்துவினுடைய<Christ>  அன்பு  எங்களை  நெருக்கி  ஏவுகிறது;  ஏனென்றால்,  எல்லாருக்காகவும்  ஒருவரே  மரித்திருக்க,  எல்லாரும்  மரித்தார்கள்  என்றும்;  {2Cor  5:14}

 

பிழைத்திருக்கிறவர்கள்  இனித்  தங்களுக்கென்று  பிழைத்திராமல்,  தங்களுக்காக  மரித்து  எழுந்தவருக்கென்று  பிழைத்திருக்கும்படி,  அவர்  எல்லாருக்காகவும்  மரித்தாரென்றும்  நிதானிக்கிறோம்.  {2Cor  5:15}

 

ஆகையால்,  இதுமுதற்கொண்டு,  நாங்கள்  ஒருவனையும்  மாம்சத்தின்படி  அறியோம்;  நாங்கள்  கிறிஸ்துவையும்<Christ>  மாம்சத்தின்படி  அறிந்திருந்தாலும்,  இனி  ஒருபோதும்  அவரை  மாம்சத்தின்படி  அறியோம்.  {2Cor  5:16}

 

இப்படியிருக்க,  ஒருவன்  கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்<Christ>  புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்;  பழையவைகள்  ஒழிந்துபோயின,  எல்லாம்  புதிதாயின.  {2Cor  5:17}

 

இவையெல்லாம்  தேவனாலே  உண்டாயிருக்கிறது;  அவர்  இயேசுகிறிஸ்துவைக்கொண்டு<Jesus  Christ>  நம்மைத்  தம்மோடே  ஒப்புரவாக்கி,  ஒப்புரவாக்குதலின்  ஊழியத்தை  எங்களுக்கு  ஒப்புக்கொடுத்தார்.  {2Cor  5:18}

 

அதென்னவெனில்,  தேவன்  உலகத்தாருடைய  பாவங்களை  எண்ணாமல்,  கிறிஸ்துவுக்குள்<Christ>  அவர்களைத்  தமக்கு  ஒப்புரவாக்கி,  ஒப்புரவாக்குதலின்  உபதேசத்தை  எங்களிடத்தில்  ஒப்புவித்தார்.  {2Cor  5:19}

 

ஆனபடியினாலே,  தேவனானவர்  எங்களைக்கொண்டு  புத்திசொல்லுகிறதுபோல,  நாங்கள்  கிறிஸ்துவுக்காக<Christ>  ஸ்தானாபதிகளாயிருந்து,  தேவனோடே  ஒப்புரவாகுங்கள்  என்று,  கிறிஸ்துவினிமித்தம்<Christ>  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறோம்.  {2Cor  5:20}

 

நாம்  அவருக்குள்  தேவனுடைய  நீதியாகும்படிக்கு,  பாவம்  அறியாத  அவரை  நமக்காகப்  பாவமாக்கினார்.  {2Cor  5:21}

 

தேவனுடைய  கிருபையை  நீங்கள்  விருதாவாய்ப்  பெறாதபடிக்கு,  உடன்வேலையாட்களாகிய  நாங்கள்  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறோம்.  {2Cor  6:1}

 

அநுக்கிரக  காலத்திலே  நான்  உனக்குச்  செவிகொடுத்து,  இரட்சணியநாளிலே  உனக்கு  உதவிசெய்தேன்  என்று  சொல்லியிருக்கிறாரே;  இதோ,  இப்பொழுதே  அநுக்கிரககாலம்,  இப்பொழுதே  இரட்சணியநாள்.  {2Cor  6:2}

 

இந்த  ஊழியம்  குற்றப்படாதபடிக்கு,  நாங்கள்  யாதொன்றிலும்  இடறல்  உண்டாக்காமல்,  எவ்விதத்தினாலேயும்,  எங்களைத்  தேவஊழியக்காரராக  விளங்கப்பண்ணுகிறோம்.  {2Cor  6:3}

 

மிகுந்த  பொறுமையிலும்,  உபத்திரவங்களிலும்,  நெருக்கங்களிலும்,  இடுக்கண்களிலும்,  {2Cor  6:4}

 

அடிகளிலும்,  காவல்களிலும்,  கலகங்களிலும்,  பிரயாசங்களிலும்,  கண்விழிப்புகளிலும்,  உபவாசங்களிலும்,  {2Cor  6:5}

 

கற்பிலும்,  அறிவிலும்,  நீடிய  சாந்தத்திலும்,  தயவிலும்,  பரிசுத்தஆவியிலும்,  மாயமற்ற  அன்பிலும்,  {2Cor  6:6}

 

சத்தியவசனத்திலும்,  திவ்விய  பலத்திலும்;  நீதியாகிய  வலதிடதுபக்கத்து  ஆயுதங்களைத்  தரித்திருக்கிறதிலும்,  {2Cor  6:7}

 

கனத்திலும்,  கனவீனத்திலும்,  துர்க்கீர்த்தியிலும்,  நற்கீர்த்தியிலும்;  எத்தரென்னப்பட்டாலும்  நிஜஸ்தராகவும்,  {2Cor  6:8}

 

அறியப்படாதவர்களென்னப்பட்டாலும்  நன்றாய்  அறியப்பட்டவர்களாகவும்,  சாகிறவர்கள்  என்னப்பட்டாலும்  உயிரோடிருக்கிறவர்களாகவும்,  தண்டிக்கப்படுகிறவர்கள்  என்னப்பட்டாலும்  கொல்லப்படாதவர்களாகவும்,  {2Cor  6:9}

 

துக்கப்படுகிறவர்கள்  என்னப்பட்டாலும்  எப்பொழுதும்  சந்தோஷப்படுகிறவர்களாகவும்,  தரித்திரர்  என்னப்பட்டாலும்  அநேகரை  ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும்,  ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும்  சகலத்தையுமுடையவர்களாகவும்  எங்களை  விளங்கப்பண்ணுகிறோம்.  {2Cor  6:10}

 

கொரிந்தியரே<Corinthians>,  எங்கள்  வாய்  உங்களோடே  பேசத்  திறந்திருக்கிறது,  எங்கள்  இருதயம்  பூரித்திருக்கிறது.  {2Cor  6:11}

 

எங்கள்  உள்ளம்  உங்களைக்குறித்து  நெருக்கமடையவில்லை,  உங்கள்  உள்ளமே  எங்களைக்குறித்து  நெருக்கமடைந்திருக்கிறது.  {2Cor  6:12}

 

ஆதலால்  அதற்குப்  பதிலீடாக  நீங்களும்  பூரிப்பாகுங்களென்று,  பிள்ளைகளுக்குச்  சொல்லுகிறதுபோல,  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  {2Cor  6:13}

 

அந்நிய  நுகத்திலே  அவிசுவாசிகளுடன்  பிணைக்கப்படாதிருப்பீர்களாக;  நீதிக்கும்  அநீதிக்கும்  சம்பந்தமேது?  ஒளிக்கும்  இருளுக்கும்  ஐக்கியமேது?  {2Cor  6:14}

 

கிறிஸ்துவுக்கும்<Christ>  பேலியாளுக்கும்<Belial>  இசைவேது?  அவிசுவாசியுடனே  விசுவாசிக்குப்  பங்கேது?  {2Cor  6:15}

 

தேவனுடைய  ஆலயத்துக்கும்  விக்கிரகங்களுக்கும்  சம்பந்தமேது?  நான்  அவர்களுக்குள்ளே  வாசம்பண்ணி,  அவர்களுக்குள்ளே  உலாவி,  அவர்கள்  தேவனாயிருப்பேன்,  அவர்கள்  என்  ஜனங்களாயிருப்பார்கள்  என்று,  தேவன்  சொன்னபடி,  நீங்கள்  ஜீவனுள்ள  தேவனுடைய  ஆலயமாயிருக்கிறீர்களே.  {2Cor  6:16}

 

ஆனபடியால்,  நீங்கள்  அவர்கள்  நடுவிலிருந்து  புறப்பட்டுப்  பிரிந்துபோய்,  அசுத்தமானதைத்  தொடாதிருங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  {2Cor  6:17}

 

அப்பொழுது,  நான்  உங்களை  ஏற்றுக்கொண்டு,  உங்களுக்குப்  பிதாவாயிருப்பேன்,  நீங்கள்  எனக்குக்  குமாரரும்  குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று  சர்வவல்லமையுள்ள  கர்த்தர்  சொல்லுகிறார்.  {2Cor  6:18}

 

இப்படிப்பட்ட  வாக்குத்தத்தங்கள்  நமக்கு  உண்டாயிருக்கிறபடியினால்,  பிரியமானவர்களே,  மாம்சத்திலும்  ஆவியிலும்  உண்டான  எல்லா  அசுசியும்  நீங்க,  நம்மைச்  சுத்திகரித்துக்கொண்டு,  பரிசுத்தமாகுதலைத்  தேவபயத்தோடே  பூரணப்படுத்தக்கடவோம்.  {2Cor  7:1}

 

எங்களுக்கு  இடங்கொடுங்கள்;  நாங்கள்  ஒருவனுக்கும்  அநியாயஞ்செய்யவில்லை,  ஒருவனையும்  கெடுக்கவில்லை,  ஒருவனையும்  வஞ்சிக்கவில்லை.  {2Cor  7:2}

 

உங்களைக்  குற்றவாளிகளாக்கும்  பொருட்டாக  இப்படி  நான்  சொல்லுகிறதில்லை;  முன்னே  நான்  சொல்லியபடி,  உங்களுடனேகூடச்  சாகவும்  கூடப்  பிழைக்கவுந்தக்கதாக  எங்களிருதயங்களில்  நீங்கள்  இருக்கிறீர்களே.  {2Cor  7:3}

 

மிகுந்த  தைரியத்தோடே  உங்களுடன்  பேசுகிறேன்;  உங்களைக்குறித்து  மிகவும்  மேன்மைபாராட்டுகிறேன்,  ஆறுதலால்  நிறைந்திருக்கிறேன்,  எங்களுக்கு  உண்டான  சகல  உபத்திரவத்திலேயும்  பரிபூரண  சந்தோஷமாயிருக்கிறேன்.  {2Cor  7:4}

 

எப்படியென்றால்,  நாங்கள்  மக்கெதோனியா<Macedonia>  நாட்டிலே  வந்தபோது,  எங்கள்  சரீரத்திற்கு  இளைப்பாறுதல்  ஒன்றுமில்லாமல்,  எப்பக்கத்திலேயும்  உபத்திரவப்பட்டோம்;  புறம்பே  போராட்டங்களும்,  உள்ளே  பயங்களும்  இருந்தன.  {2Cor  7:5}

 

ஆகிலும்,  சிறுமைப்பட்டவர்களுக்கு  ஆறுதல்  செய்கிற  தேவன்  தீத்து<Titus>  வந்ததினாலே  எங்களுக்கு  ஆறுதல்செய்தார்.  {2Cor  7:6}

 

அவன்  வந்ததினாலே  மாத்திரமல்ல,  உங்கள்  வாஞ்சையையும்,  உங்கள்  துக்கிப்பையும்,  என்னைப்பற்றி  உங்களுக்கு  உண்டான  பக்திவைராக்கியத்தையும்  அவன்  கண்டு,  உங்களால்  அடைந்த  ஆறுதலைத்  தெரியப்படுத்தினதினாலும்,  நானும்  ஆறுதலடைந்து  அதிகமாய்ச்  சந்தோஷப்பட்டேன்.  {2Cor  7:7}

 

ஆதலால்  நான்  நிருபத்தினாலே  உங்களைத்  துக்கப்படுத்தியிருந்தும்,  அந்த  நிருபம்  கொஞ்சப்பொழுதாகிலும்  உங்களைத்  துக்கப்படுத்தினதென்று  கண்டு  நான்  மனஸ்தாபப்பட்டிருந்தும்,  இப்பொழுது  மனஸ்தாபப்படுகிறதில்லை.  {2Cor  7:8}

 

இப்பொழுது  சந்தோஷப்படுகிறேன்;  நீங்கள்  துக்கப்பட்டதற்காக  அல்ல,  மனந்திரும்புகிறதற்கேதுவாகத்  துக்கப்பட்டதற்காகவே  சந்தோஷப்படுகிறேன்;  நீங்கள்  ஒன்றிலும்  எங்களால்  நஷ்டப்படாதபடிக்கு,  தேவனுக்கேற்ற  துக்கம்  அடைந்தீர்களே.  {2Cor  7:9}

 

தேவனுக்கேற்ற  துக்கம்  பின்பு  மனஸ்தாபப்படுகிறதற்கு  இடமில்லாமல்  இரட்சிப்புக்கேதுவான  மனந்திரும்புதலை  உண்டாக்குகிறது;  லௌகிக  துக்கமோ  மரணத்தை  உண்டாக்குகிறது.  {2Cor  7:10}

 

பாருங்கள்,  நீங்கள்  தேவனுக்கேற்ற  துக்கமடைந்ததுண்டே;  அது  உங்களிடத்தில்  எவ்வளவு  ஜாக்கிரதையையும்,  குற்றந்தீர  எவ்வளவு  நியாயஞ்சொல்லுதலையும்,  எவ்வளவு  வெறுப்பையும்,  எவ்வளவு  பயத்தையும்,  எவ்வளவு  ஆவலையும்,  எவ்வளவு  பக்திவைராக்கியத்தையும்,  எவ்வளவு  கண்டிப்பையும்  உண்டாக்கிற்று.  இந்தக்  காரியத்திலே  நீங்கள்  எல்லாவிதத்திலும்  உங்களைச்  சுத்தவான்களென்று  விளங்கப்பண்ணினீர்கள்.  {2Cor  7:11}

 

ஆதலால்  நான்  உங்களுக்கு  அப்படி  எழுதியிருந்தும்,  அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல,  அநியாயஞ்செய்யப்பட்டவனிமித்தமுமல்ல,  தேவனுக்குமுன்பாக  உங்களைக்குறித்து  எங்களுக்கு  உண்டாயிருக்கிற  ஜாக்கிரதை  உங்களுக்கு  வெளிப்படும்பொருட்டே  அப்படி  எழுதினேன்.  {2Cor  7:12}

 

இதினிமித்தம்  நீங்கள்  ஆறுதலடைந்ததினாலே  நாங்களும்  ஆறுதலடைந்தோம்;  விசேஷமாகத்  தீத்துவினுடைய<Titus>  ஆவி  உங்கள்  அனைவராலும்  ஆறுதலடைந்ததினாலே,  அவனுக்கு  உண்டான  சந்தோஷத்தினால்  அதிக  சந்தோஷப்பட்டோம்.  {2Cor  7:13}

 

இப்படியிருக்க,  உங்களுக்குப்  புகழ்ச்சியாய்  நான்  அவனுடனே  சொன்ன  யாதொன்றைக்குறித்தும்,  வெட்கப்படமாட்டேன்;  நாங்கள்  சகலத்தையும்  உங்களுக்குச்  சத்தியமாய்ச்  சொன்னதுபோல,  தீத்துவுடனே<Titus>  நாங்கள்  உங்களுக்குப்  புகழ்ச்சியாய்ச்  சொன்னதும்  சத்தியமாக  விளங்கிற்றே.  {2Cor  7:14}

 

மேலும்  நீங்களெல்லாரும்  கட்டளைக்கு  அமைந்து,  பயத்தோடும்  நடுக்கத்தோடும்  தன்னை  ஏற்றுக்கொண்டதை  அவன்  நினைக்கையில்,  அவனுடைய  உள்ளம்  உங்களைப்பற்றி  அதிக  அன்பாயிருக்கிறது.  {2Cor  7:15}

 

ஆகையால்  எல்லாவிதத்திலும்  உங்களைக்குறித்து  எனக்குத்  திடநம்பிக்கை  உண்டாயிருக்கிறதென்று  சந்தோஷப்படுகிறேன்.  {2Cor  7:16}

 

அன்றியும்  சகோதரரே,  மக்கெதோனியா<Macedonia>  நாட்டுச்  சபைகளுக்குத்  தேவன்  அளித்த  கிருபையை  உங்களுக்கு  அறிவிக்கிறோம்.  {2Cor  8:1}

 

அவர்கள்  மிகுந்த  உபத்திரவத்தினாலே  சோதிக்கப்படுகையில்,  கொடிய  தரித்திரமுடையவர்களாயிருந்தும்,  தங்கள்  பரிபூரண  சந்தோஷத்தினாலே  மிகுந்த  உதாரத்துவமாய்க்  கொடுத்தார்கள்.  {2Cor  8:2}

 

மேலும்  அவர்கள்  தங்கள்  திராணிக்குத்  தக்கதாகவும்,  தங்கள்  திராணிக்கு  மிஞ்சியும்  கொடுக்க,  தாங்களே  மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு,  நான்  சாட்சியாயிருக்கிறேன்.  {2Cor  8:3}

 

தங்கள்  உபகாரத்தையும்,  பரிசுத்தவான்களுக்குச்  செய்யப்படும்  தர்ம  ஊழியத்தின்  பங்கையும்  நாங்கள்  ஏற்றுக்கொள்ளும்படி  அவர்கள்  எங்களை  மிகவும்  வேண்டிக்கொண்டார்கள்.  {2Cor  8:4}

 

மேலும்  நாங்கள்  நினைத்தபடிமாத்திரம்  கொடாமல்,  தேவனுடைய  சித்தத்தினாலே  முன்பு  தங்களைத்தாமே  கர்த்தருக்கும்,  பின்பு  எங்களுக்கும்  ஒப்புக்கொடுத்தார்கள்.  {2Cor  8:5}

 

ஆதலால்  தீத்து<Titus>  இந்தத்  தர்மகாரியத்தை  உங்களிடத்தில்  தொடங்கினபடியே,  அதை  முடிக்கவும்  வேண்டுமென்று  அவனைக்  கேட்டுக்கொண்டோம்.  {2Cor  8:6}

 

அல்லாமலும்,  விசுவாசத்திலும்,  போதிப்பிலும்,  அறிவிலும்,  எல்லாவித  ஜாக்கிரதையிலும்,  எங்கள்மேலுள்ள  உங்கள்  அன்பிலும்,  மற்றெல்லாக்  காரியங்களிலும்,  நீங்கள்  பெருகியிருக்கிறதுபோல,  இந்தத்  தர்மகாரியத்திலும்  பெருகவேண்டும்.  {2Cor  8:7}

 

இதை  நான்  கட்டளையாகச்  சொல்லாமல்,  மற்றவர்களுடைய  ஜாக்கிரதையைக்கொண்டு,  உங்கள்  அன்பின்  உண்மையைச்  சோதிக்கும்பொருட்டே  சொல்லுகிறேன்.  {2Cor  8:8}

 

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  கிருபையை  அறிந்திருக்கிறீர்களே;  அவர்  ஐசுவரியமுள்ளவராயிருந்தும்,  நீங்கள்  அவருடைய  தரித்திரத்தினாலே  ஐசுவரியவான்களாகும்படிக்கு,  உங்கள்  நிமித்தம்  தரித்திரரானாரே.  {2Cor  8:9}

 

இதைக்குறித்து  என்  யோசனையை  உங்களுக்கு  அறிவிக்கிறேன்;  இதைச்  செய்கிறதற்கு  மாத்திரமல்ல,  செய்யவேண்டுமென்று  உற்சாகப்படுகிறதற்கும்  ஒரு  வருஷமாய்  ஆரம்பம்பண்ணின  உங்களுக்கு  இது  தகுதியாயிருக்கும்.  {2Cor  8:10}

 

ஆகையால்  அதை  இப்பொழுது  செய்து  நிறைவேற்றுங்கள்;  கொடுக்கவேண்டும்  என்கிற  விருப்பமுண்டாயிருந்ததுபோல,  உங்களுக்கு  உள்ளவைகளில்  எடுத்து  அதை  நிறைவேற்றுதலும்  உண்டாவதாக.  {2Cor  8:11}

 

ஒருவனுக்கு  மனவிருப்பமிருந்தால்,  அவனுக்கு  இல்லாததின்படியல்ல,  அவனுக்கு  உள்ளதின்படியே  அங்கிகரிக்கப்படும்.  {2Cor  8:12}

 

மற்றவர்களுக்குச்  சகாயமும்  உங்களுக்கு  வருத்தமும்  உண்டாகும்படியல்ல,  சமநிலையிருக்கும்படியாகவே  சொல்லுகிறேன்.  {2Cor  8:13}

 

எப்படியெனில்,  மிகுதியாய்ச்  சேர்த்தவனுக்கு  அதிகமானதுமில்லை,  கொஞ்சமாய்ச்  சேர்த்தவனுக்குக்  குறைவானதுமில்லை  என்று  எழுதியிருக்கிறபிரகாரம்,  {2Cor  8:14}

 

சமநிலைப்  பிரமாணத்தின்படியே,  அவர்களுடைய  செல்வம்  உங்கள்  வறுமைக்கு  உதவும்படிக்கு  இக்காலத்திலே  உங்களுடைய  செல்வம்  அவர்களுடைய  வறுமைக்கு  உதவுவதாக.  {2Cor  8:15}

 

அன்றியும்  உங்களுக்காக  இப்படிப்பட்ட  ஜாக்கிரதை  உண்டாயிருக்கும்படி  தீத்துவின்<Titus>  இருதயத்தில்  அருளின  தேவனுக்கு  ஸ்தோத்திரம்.  {2Cor  8:16}

 

நாங்கள்  கேட்டுக்கொண்டதை  அவன்  அங்கிகரித்ததுமல்லாமல்,  அவன்  அதிக  ஜாக்கிரதையாயிருந்து,  தன்  மனவிருப்பத்தின்படியே  உங்களிடத்திற்கு  வரப்  புறப்பட்டான்.  {2Cor  8:17}

 

சுவிசேஷ  ஊழியத்தில்  எல்லாச்  சபைகளிலும்  புகழ்ச்சிபெற்ற  ஒரு  சகோதரனை  அவனோடேகூட  அனுப்பியிருக்கிறோம்.  {2Cor  8:18}

 

அதுமாத்திரமல்ல,  கர்த்தருக்கு  மகிமையுண்டாகவும்,  உங்கள்  மனவிருப்பம்  விளங்கவும்,  எங்கள்  ஊழியத்தினாலே  சேர்க்கப்படும்  தர்மப்பணத்தைக்  கொண்டுபோகையில்,  எங்களுக்கு  வழித்துணையாயிருக்கும்படி,  அவன்  சபைகளால்  தெரிந்து  ஏற்படுத்தப்பட்டவனாயும்  இருக்கிறான்.  {2Cor  8:19}

 

எங்கள்  ஊழியத்தினாலே  சேர்க்கப்படும்  இந்த  மிகுதியான  தர்மப்பணத்தைக்குறித்து  ஒருவனும்  எங்களைக்  குற்றப்படுத்தாதபடிக்கு  நாங்கள்  எச்சரிக்கையாயிருந்து,  {2Cor  8:20}

 

கர்த்தருக்கு  முன்பாகமாத்திரமல்ல,  மனுஷருக்கு  முன்பாகவும்  யோக்கியமானவைகளைச்  செய்ய  நாடுகிறோம்.  {2Cor  8:21}

 

மேலும்,  அநேக  காரியங்களில்  ஜாக்கிரதையுள்ளவனென்று  நாங்கள்  பலமுறை  கண்டறிந்தவனும்,  இப்பொழுது  உங்கள்மேலுள்ள  மிகுந்த  நம்பிக்கையினாலே  அதிக  ஜாக்கிரதையுள்ளவனுமாகிய  நம்முடைய  சகோதரனையும்  இவர்களோடே  கூட  அனுப்பியிருக்கிறோம்.  {2Cor  8:22}

 

தீத்துவைக்குறித்து<Titus>  ஒருவன்  விசாரித்தால்,  அவன்  எனக்குக்  கூட்டாளியும்,  உங்களுக்காக  என்  உடன்வேலையாளுமாயிருக்கிறானென்றும்;  எங்கள்  சகோதரரைக்குறித்து  ஒருவன்  விசாரித்தால்,  அவர்கள்  சபைகளுடைய  ஸ்தானாபதிகளும்,  கிறிஸ்துவுக்கு<Christ>  மகிமையுமாயிருக்கிறார்களென்றும்  அறியக்கடவன்.  {2Cor  8:23}

 

ஆதலால்  உங்கள்  அன்பையும்,  நாங்கள்  உங்களைக்குறித்துச்  சொன்ன  புகழ்ச்சியையும்,  சபைகளுக்கு  முன்பாக  அவர்களுக்குத்  திருஷ்டாந்தப்படுத்துங்கள்.  {2Cor  8:24}

 

பரிசுத்தவான்களுக்குச்  செய்யவேண்டிய  தர்மசகாயத்தைக்குறித்து,  நான்  அதிகமாக  உங்களுக்கு  எழுதவேண்டுவதில்லை.  {2Cor  9:1}

 

உங்கள்  மனவிருப்பத்தை  அறிந்திருக்கிறேன்;  அகாயாவிலுள்ளவர்கள்<Achaia>  ஒருவருஷமாக  ஆயத்தமாயிருக்கிறார்களென்று,  நான்  மக்கெதோனியருடனே<Macedonia>  சொல்லி,  உங்களைப்  புகழ்ந்தேனே;  உங்கள்  ஜாக்கிரதை  அநேகரை  எழுப்பிவிட்டதுமுண்டு.  {2Cor  9:2}

 

அப்படியிருந்தும்,  உங்களைக்குறித்து  நாங்கள்  சொன்ன  புகழ்ச்சி  இந்தக்  காரியத்தில்  வீணாய்ப்போகாமல்,  நான்  சொன்னபடி  நீங்கள்  ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு,  இந்தச்  சகோதரரை  அனுப்பினேன்.  {2Cor  9:3}

 

மக்கெதோனியர்<Macedonia>  என்னுடனேகூட  வந்து,  உங்களை  ஆயத்தப்படாதவர்களாகக்  கண்டால்,  இவ்வளவு  நிச்சயமாய்  உங்களைப்  புகழ்ந்ததற்காக,  நீங்கள்  வெட்கப்படுவீர்களென்று  நாங்கள்  சொல்லாமல்,  நாங்களே  வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.  {2Cor  9:4}

 

ஆகையால்,  வாக்குத்தத்தம்  பண்ணப்பட்டிருக்கிற  உங்கள்  தானதர்மமானது  லோபத்தனமாய்க்  கொடுக்கப்பட்டதாயிராமல்,  உதாரத்துவமாய்க்  கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக  அதை  ஆயத்தப்படுத்துகிறதற்குச்  சகோதரரை  ஏவி,  உங்களிடத்தில்  முன்னதாக  அனுப்புவது  எனக்கு  அவசியம்  என்று  காணப்பட்டது.  {2Cor  9:5}

 

பின்னும்  நான்  சொல்லுகிறதென்னவெனில்,  சிறுக  விதைக்கிறவன்  சிறுக  அறுப்பான்,  பெருக  விதைக்கிறவன்  பெருக  அறுப்பான்.  {2Cor  9:6}

 

அவனவன்  விசனமாயுமல்ல,  கட்டாயமாயுமல்ல,  தன்  மனதில்  நியமித்தபடியே  கொடுக்கக்கடவன்;  உற்சாகமாய்க்  கொடுக்கிறவனிடத்தில்  தேவன்  பிரியமாயிருக்கிறார்.  {2Cor  9:7}

 

மேலும்,  நீங்கள்  எல்லாவற்றிலும்  எப்பொழுதும்  சம்பூரணமுடையவர்களாயும்,  சகலவித  நற்கிரியைகளிலும்  பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக,  தேவன்  உங்களிடத்தில்  சகலவித  கிருபையையும்  பெருகச்செய்ய  வல்லவராயிருக்கிறார்.  {2Cor  9:8}

 

வாரியிறைத்தான்,  ஏழைகளுக்குக்  கொடுத்தான்,  அவனுடைய  நீதி  என்றென்றைக்கும்  நிற்கும்  என்று  எழுதியிருக்கிறபடியாகும்.  {2Cor  9:9}

 

விதைக்கிறவனுக்கு  விதையையும்,  புசிக்கிறதற்கு  ஆகாரத்தையும்  அளிக்கிறவர்  உங்களுக்கு  விதையை  அளித்து,  அதைப்  பெருகப்பண்ணி,  உங்கள்  நீதியின்  விளைச்சலை  வர்த்திக்கச்செய்வார்.  {2Cor  9:10}

 

தேவனுக்கு  எங்களால்  ஸ்தோத்திரமுண்டாவதற்கு  ஏதுவாயிருக்கும்  மிகுந்த  உதாரகுணத்திலே  நீங்கள்  எவ்விதத்திலும்  சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.  {2Cor  9:11}

 

இந்தத்  தர்மசகாயமாகிய  பணிவிடை  பரிசுத்தவான்களுடைய  குறைவுகளை  நீக்குகிறதுமல்லாமல்,  அநேகர்  தேவனை  ஸ்தோத்திரிப்பதினாலே  சம்பூரண  பலனுள்ளதாயும்  இருக்கும்.  {2Cor  9:12}

 

அவர்கள்  இந்தத்  தர்மசகாயத்தினாலாகிய  நன்மையை  அனுபவித்து,  நீங்கள்  கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்தைக்  கீழ்ப்படிதலோடே  அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும்,  தங்களுக்கும்  மற்ற  அனைவருக்கும்  நீங்கள்  உதாரத்துவமாய்த்  தர்மஞ்செய்கிறதினிமித்தமும்,  அவர்கள்  தேவனை  மகிமைப்படுத்தி;  {2Cor  9:13}

 

உங்களுக்காக  வேண்டுதல்செய்து,  தேவன்  உங்களுக்கு  அளித்த  மிகவும்  விசேஷித்த  கிருபையினிமித்தம்  உங்கள்மேல்  வாஞ்சையாயிருக்கிறார்கள்.  {2Cor  9:14}

 

தேவன்  அருளிய  சொல்லிமுடியாத  ஈவுக்காக  அவருக்கு  ஸ்தோத்திரம்.  {2Cor  9:15}

 

உங்களுக்கு  முன்பாக  இருக்கும்போது  தாழ்மையாயும்,  தூரத்திலே  இருக்கும்போது  உங்கள்மேல்  கண்டிப்பாயும்  இருக்கிற  பவுலாகிய<Paul>  நான்  கிறிஸ்துவின்<Christ>  சாந்தத்தையும்  தயவையும்  முன்னிட்டு  உங்களுக்குப்  புத்திசொல்லுகிறேன்.  {2Cor  10:1}

 

எங்களை  மாம்சத்தின்படி  நடக்கிறவர்கள்  என்று  எண்ணுகிற  சிலரைக்குறித்து  நான்  கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று  நினைத்திருக்கிற  தைரியத்தோடே,  உங்கள்முன்பாக  இருக்கும்போது,  நான்  கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு  நீங்கள்  எச்சரிக்கையாயிருக்க  உங்களை  வேண்டிக்கொள்ளுகிறேன்.  {2Cor  10:2}

 

நாங்கள்  மாம்சத்தில்  நடக்கிறவர்களாயிருந்தும்,  மாம்சத்தின்படி  போர்செய்கிறவர்களல்ல.  {2Cor  10:3}

 

எங்களுடைய  போராயுதங்கள்  மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல்,  அரண்களை  நிர்மூலமாக்குகிறதற்குத்  தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.  {2Cor  10:4}

 

அவைகளால்  நாங்கள்  தர்க்கங்களையும்,  தேவனை  அறிகிற  அறிவுக்கு  விரோதமாய்  எழும்புகிற  எல்லா  மேட்டிமையையும்  நிர்மூலமாக்கி,  எந்த  எண்ணத்தையும்  கிறிஸ்துவுக்குக்<Christ>  கீழ்ப்படியச்  சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.  {2Cor  10:5}

 

உங்கள்  கீழ்ப்படிதல்  நிறைவேறும்போது,  எல்லாக்  கீழ்ப்படியாமைக்குந்தக்க  நீதியுள்ள  தண்டனையைச்  செலுத்த  ஆயத்தமாயுமிருக்கிறோம்.  {2Cor  10:6}

 

வெளித்தோற்றத்தின்படி  பார்க்கிறீர்களா?  ஒருவன்  தன்னைக்  கிறிஸ்துவுக்குரியவனென்று<Christ>  நம்பினால்,  தான்  கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல<Christ>  நாங்களும்  கிறிஸ்துவுக்குரியவர்களென்று<Christ>  அவன்  தன்னிலேதானே  சிந்திக்கக்கடவன்.  {2Cor  10:7}

 

மேலும்,  உங்களை  நிர்மூலமாக்குகிறதற்கல்ல,  உங்களை  ஊன்றக்  கட்டுகிறதற்குக்  கர்த்தர்  எங்களுக்குக்  கொடுத்த  அதிகாரத்தைக்குறித்து,  நான்  இன்னும்  சற்றே  அதிகமாய்  மேன்மைபாராட்டினாலும்  நான்  வெட்கப்படுவதில்லை.  {2Cor  10:8}

 

நான்  நிருபங்களாலே  உங்களைப்  பயமுறுத்துகிறவனாய்த்  தோன்றாதபடிக்கு  இதைச்  சொல்லுகிறேன்.  {2Cor  10:9}

 

அவனுடைய  நிருபங்கள்  பாரயோசனையும்  பலமுமுள்ளவைகள்;  சரீரத்தின்  தோற்றமோ  பலவீனமும்,  வசனம்  அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.  {2Cor  10:10}

 

அப்படிச்  சொல்லுகிறவன்,  நாங்கள்  தூரத்திலிருக்கும்போது  எழுதுகிற  நிருபங்களால்  வசனத்தில்  எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ,  அப்படிப்பட்டவர்களாகவே  சமீபத்திலிருக்கும்போதும்  கிரியையிலும்  இருப்போம்  என்று  சிந்திக்கக்கடவன்.  {2Cor  10:11}

 

ஆகிலும்  தங்களைத்  தாங்களே  மெச்சிக்கொள்ளுகிற  சிலருக்கு  நாங்கள்  எங்களைச்  சரியாக்கவும்  ஒப்பிடவும்  துணியமாட்டோம்;  தங்களைக்கொண்டு  தங்களை  அளந்துகொண்டு,  தங்களுக்கே  தங்களை  ஒப்பிட்டுக்கொள்ளுகிற  அவர்கள்  புத்திமான்களல்ல.  {2Cor  10:12}

 

நாங்கள்  அளவுக்கு  மிஞ்சி  மேன்மைபாராட்டாமல்,  உங்களிடம்வரைக்கும்  வந்தெட்டத்தக்கதாக,  தேவன்  எங்களுக்கு  அளந்து  பகிர்ந்த  அளவுப்பிரமாணத்தின்படியே  மேன்மைபாராட்டுகிறோம்.  {2Cor  10:13}

 

உங்களிடத்தில்  வந்தெட்டாதவர்களாய்  நாங்கள்  அளவுக்கு  மிஞ்சிப்போகிறதில்லை;  நாங்கள்  கிறிஸ்துவின்<Christ>  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து  உங்களிடம்வரைக்கும்  வந்தோமே.  {2Cor  10:14}

 

எங்கள்  அளவைக்  கடந்து  மற்றவர்களுடைய  வேலைக்குட்பட்டு  மேன்மைபாராட்டமாட்டோம்.  {2Cor  10:15}

 

ஆகிலும்  உங்கள்  விசுவாசம்  விருத்தியாகும்போது,  மற்றவர்களுடைய  எல்லைகளுக்குள்ளே  செய்யப்பட்டவைகளை  நாங்கள்  செய்ததாக  மேன்மைபாராட்டாமல்,  உங்களுக்கு  அப்புறமான  இடங்களில்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிக்கத்தக்கதாக,  எங்கள்  அளவின்படி  உங்களால்  மிகவும்  பெருகி  விருத்தியடைவோமென்று  நம்பிக்கையாயிருக்கிறோம்.  {2Cor  10:16}

 

மேன்மைபாராட்டுகிறவன்  கர்த்தரைக்குறித்தே  மேன்மைபாராட்டக்கடவன்.  {2Cor  10:17}

 

தன்னைத்தான்  புகழுகிறவன்  உத்தமனல்ல,  கர்த்தரால்  புகழப்படுகிறவனே  உத்தமன்.  {2Cor  10:18}

 

என்  புத்தியீனத்தை  நீங்கள்  சற்றே  சகித்தால்  நலமாயிருக்கும்;  என்னைச்  சகித்துமிருக்கிறீர்களே.  {2Cor  11:1}

 

நான்  உங்களைக்  கற்புள்ள  கன்னிகையாகக்  கிறிஸ்து<Christ>  என்னும்  ஒரே  புருஷனுக்கு  ஒப்புக்கொடுக்க  நியமித்தபடியால்,  உங்களுக்காகத்  தேவவைராக்கியமான  வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.  {2Cor  11:2}

 

ஆகிலும்,  சர்ப்பமானது  தன்னுடைய  தந்திரத்தினாலே  ஏவாளை<Eve>  வஞ்சித்ததுபோல,  உங்கள்  மனதும்  கிறிஸ்துவைப்பற்றிய<Christ>  உண்மையினின்று  விலகும்படி  கெடுக்கப்படுமோவென்று  பயந்திருக்கிறேன்.  {2Cor  11:3}

 

எப்படியெனில்,  உங்களிடத்தில்  வருகிறவன்  நாங்கள்  பிரசங்கியாத  வேறொரு  இயேசுவைப்<Jesus>  பிரசங்கித்தானானால்,  அல்லது  நீங்கள்  பெற்றிராத  வேறொரு  ஆவியையும்,  நீங்கள்  ஏற்றுக்கொள்ளாத  வேறொரு  சுவிசேஷத்தையும்  பெற்றீர்களானால்,  நன்றாய்ச்  சகித்திருப்பீர்களே.  {2Cor  11:4}

 

மகா  பிரதான  அப்போஸ்தலரிலும்,  நான்  ஒன்றிலும்  குறைவுள்ளவனல்லவென்று  எண்ணுகிறேன்.  {2Cor  11:5}

 

நான்  பேச்சிலே  கல்லாதவனாயிருந்தாலும்,  அறிவிலே  கல்லாதவனல்ல;  எந்த  விஷயத்திலும்  எல்லாருக்குமுன்பாகவும்  உங்களுக்குள்ளே  நாங்கள்  வெளிப்பட்டிருக்கிறோமே.  {2Cor  11:6}

 

நீங்கள்  உயர்த்தப்படும்படி  நான்  என்னைத்தானே  தாழ்த்தி,  தேவனுடைய  சுவிசேஷத்தை  இலவசமாய்  உங்களுக்குப்  பிரசங்கித்ததினாலே  குற்றஞ்செய்தேனோ?  {2Cor  11:7}

 

உங்களுக்கு  ஊழியஞ்செய்யும்படிக்கு,  மற்றச்  சபைகளிடத்தில்  சம்பளத்தைப்  பெற்று,  அவர்களைக்  கொள்ளையிட்டேன்.  {2Cor  11:8}

 

நான்  உங்களோடிருந்து  குறைவுபட்டபோதும்,  ஒருவரையும்  நான்  வருத்தப்படுத்தவில்லை;  மக்கெதோனியாவிலிருந்து<Macedonia>  வந்த  சகோதரர்  என்  குறைவை  நிறைவாக்கினார்கள்;  எவ்விதத்திலேயும்  உங்களுக்குப்  பாரமாயிராதபடிக்கு  ஜாக்கிரதையாயிருந்தேன்,  இனிமேலும்  ஜாக்கிரதையாயிருப்பேன்.  {2Cor  11:9}

 

அகாயாநாட்டின்<Achaia>  திசைகளிலே  இந்தப்  புகழ்ச்சி  என்னைவிட்டு  நீங்குவதில்லையென்று  என்னிலுள்ள  கிறிஸ்துவினுடைய<Christ>  சத்தியத்தைக்கொண்டு  சொல்லுகிறேன்.  {2Cor  11:10}

 

இப்படிச்  சொல்லவேண்டியதென்ன?  நான்  உங்களைச்  சிநேகியாதபடியினாலேயோ?  தேவன்  அறிவார்.  {2Cor  11:11}

 

மேலும்,  எங்களை  விரோதிக்கச்  சமயந்தேடுகிறவர்களுக்குச்  சமயம்  கிடையாதபடிக்கு,  தங்களைக்குறித்து  மேன்மைபாராட்டுகிற  காரியத்தில்  அவர்கள்  எங்களைப்போலக்  காணப்படும்படி,  நான்  செய்வதையே  இன்னும்  செய்வேன்.  {2Cor  11:12}

 

அப்படிப்பட்டவர்கள்  கள்ள  அப்போஸ்தலர்கள்,  கபடமுள்ள  வேலையாட்கள்,  கிறிஸ்துவினுடைய<Christ>  அப்போஸ்தலரின்  வேஷத்தைத்  தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.  {2Cor  11:13}

 

அது  ஆச்சரியமல்ல,  சாத்தானும்  ஒளியின்  தூதனுடைய  வேஷத்தைத்  தரித்துக்கொள்வானே.  {2Cor  11:14}

 

ஆகையால்  அவனுடைய  ஊழியக்காரரும்  நீதியின்  ஊழியக்காரருடைய  வேஷத்தைத்  தரித்துக்கொண்டால்  அது  ஆச்சரியமல்லவே;  அவர்கள்  முடிவு  அவர்கள்  கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.  {2Cor  11:15}

 

பின்னும்  நான்  சொல்லுகிறேன்;  ஒருவனும்  என்னைப்  புத்தியீனனென்று  எண்ணவேண்டாம்;  அப்படி  எண்ணினால்,  நானும்  சற்றே  மேன்மைபாராட்டும்படி,  என்னைப்  புத்தியீனனைப்போலாகிலும்  ஏற்றுக்கொள்ளுங்கள்.  {2Cor  11:16}

 

இப்படி  நான்  சொல்லுகிறது  கர்த்தருக்கேற்றபடி  சொல்லாமல்,  மேன்மைபாராட்டும்  தைரியத்தினாலே  புத்தியீனனைப்போலச்  சொல்லுகிறேன்.  {2Cor  11:17}

 

அநேகர்  மாம்சத்திற்கேற்றபடி  மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில்,  நானும்  மேன்மைபாராட்டுவேன்.  {2Cor  11:18}

 

நீங்கள்  புத்தியுள்ளவர்களாயிருந்து  புத்தியில்லாதவர்களைச்  சந்தோஷமாய்ச்  சகித்திருக்கிறீர்களே.  {2Cor  11:19}

 

ஒருவன்  உங்களைச்  சிறையாக்கினாலும்,  ஒருவன்  உங்களைப்  பட்சித்தாலும்,  ஒருவன்  உங்களைக்  கைவசப்படுத்தினாலும்,  ஒருவன்  தன்னை  உயர்த்தினாலும்,  ஒருவன்  உங்களை  முகத்தில்  அறைந்தாலும்  சகித்திருக்கிறீர்களே.  {2Cor  11:20}

 

நாங்கள்  பலவீனரானதுபோல,  எங்களுக்கு  வந்த  கனவீனத்தைக்குறித்துப்  பேசுகிறேன்;  ஒருவன்  எதிலே  துணிவுள்ளவனாயிருக்கிறானோ  அதிலே  நானும்  துணிவுள்ளவனாயிருக்கிறேன்;  இப்படிப்  புத்தியீனமாய்ப்  பேசுகிறேன்.  {2Cor  11:21}

 

அவர்கள்  எபிரெயரா<Hebrews>?  நானும்  எபிரெயன்<Hebrew>;  அவர்கள்  இஸ்ரவேலரா<Israelites>?  நானும்  இஸ்ரவேலன்<Israelite>;  அவர்கள்  ஆபிரகாமின்<Abraham>  சந்ததியாரா?  நானும்  ஆபிரகாமின்<Abraham>  சந்ததியான்.  {2Cor  11:22}

 

அவர்கள்  கிறிஸ்துவின்<Christ>  ஊழியக்காரரா?  நான்  அதிகம்;  புத்தியீனமாய்ப்  பேசுகிறேன்;  நான்  அதிகமாய்ப்  பிரயாசப்பட்டவன்,  அதிகமாய்  அடிபட்டவன்,  அதிகமாய்க்  காவல்களில்  வைக்கப்பட்டவன்,  அநேகந்தரம்  மரண  அவதியில்  அகப்பட்டவன்.  {2Cor  11:23}

 

யூதர்களால்<Jews>  ஒன்றுகுறைய  நாற்பதடியாக  ஐந்துதரம்  அடிபட்டேன்;  {2Cor  11:24}

 

மூன்றுதரம்  மிலாறுகளால்  அடிபட்டேன்,  ஒருதரம்  கல்லெறியுண்டேன்,  மூன்றுதரம்  கப்பற்சேதத்தில்  இருந்தேன்,  கடலிலே  ஒரு  இராப்பகல்  முழுவதும்  போக்கினேன்.  {2Cor  11:25}

 

அநேகந்தரம்  பிரயாணம்பண்ணினேன்;  ஆறுகளால்  வந்த  மோசங்களிலும்,  கள்ளரால்  வந்த  மோசங்களிலும்,  என்  சுயஜனங்களால்  வந்த  மோசங்களிலும்,  அந்நிய  ஜனங்களால்  வந்த  மோசங்களிலும்,  பட்டணங்களில்  உண்டான  மோசங்களிலும்,  வனாந்தரத்தில்  உண்டான  மோசங்களிலும்,  சமுத்திரத்தில்  உண்டான  மோசங்களிலும்,  கள்ளச்சகோதரரிடத்தில்  உண்டான  மோசங்களிலும்;  {2Cor  11:26}

 

பிரயாசத்திலும்,  வருத்தத்திலும்,  அநேகமுறை  கண்விழிப்புகளிலும்,  பசியிலும்  தாகத்திலும்,  அநேகமுறை  உபவாசங்களிலும்,  குளிரிலும்,  நிர்வாணத்திலும்  இருந்தேன்.  {2Cor  11:27}

 

இவை  முதலானவைகளையல்லாமல்,  எல்லாச்  சபைகளைக்குறித்தும்  உண்டாயிருக்கிற  கவலை  என்னை  நாள்தோறும்  நெருக்குகிறது.  {2Cor  11:28}

 

ஒருவன்  பலவீனனானால்  நானும்  பலவீனனாகிறதில்லையோ?  ஒருவன்  இடறினால்  என்  மனம்  எரியாதிருக்குமோ?  {2Cor  11:29}

 

நான்  மேன்மைபாராட்டவேண்டுமானால்,  என்  பலவீனத்திற்கடுத்தவைகளைக்  குறித்து  மேன்மைபாராட்டுவேன்.  {2Cor  11:30}

 

என்றென்றைக்கும்  ஸ்தோத்திரிக்கப்பட்ட  தேவனும்,  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்<Jesus  Christ>  பிதாவுமானவர்  நான்  பொய்  சொல்லுகிறதில்லையென்று  அறிவார்.  {2Cor  11:31}

 

தமஸ்குபட்டணத்து<Damascus>  அரேத்தா<Aretas>  ராஜாவினுடைய  சேனைத்தலைவன்  என்னைப்  பிடிக்கவேண்டுமென்று  தமஸ்கருடைய<Damascenes>  பட்டணத்தைக்  காவல்வைத்துக்  காத்தான்;  {2Cor  11:32}

 

அப்பொழுது  நான்  கூடையிலே  வைக்கப்பட்டு,  ஜன்னலிலிருந்து  மதில்  வழியாய்  இறக்கிவிடப்பட்டு,  அவனுடைய  கைக்குத்  தப்பினேன்.  {2Cor  11:33}

 

மேன்மைபாராட்டுகிறது  எனக்குத்  தகுதியல்லவே;  ஆகிலும்,  கர்த்தர்  அருளிய  தரிசனங்களையும்  வெளிப்படுத்தல்களையும்  சொல்லுகிறேன்.  {2Cor  12:1}

 

கிறிஸ்துவுக்குள்ளான<Christ>  ஒரு  மனுஷனை  அறிவேன்;  அவன்  பதினாலு  வருஷத்திற்கு  முன்னே  மூன்றாம்  வானம்வரைக்கும்  எடுக்கப்பட்டான்;  அவன்  சரீரத்திலிருந்தானோ,  சரீரத்திற்குப்  புறம்பேயிருந்தானோ,  அதை  அறியேன்;  தேவன்  அறிவார்.  {2Cor  12:2}

 

அந்த  மனுஷன்  பரதீசுக்குள்  எடுக்கப்பட்டு,  மனுஷர்  பேசப்படாததும்  வாக்குக்கெட்டாததுமாகிய  வார்த்தைகளைக்  கேட்டானென்று  அறிந்திருக்கிறேன்.  {2Cor  12:3}

 

அவன்  சரீரத்திலிருந்தானோ,  சரீரத்திற்குப்  புறம்பேயிருந்தானோ,  அதை  அறியேன்;  தேவன்  அறிவார்.  {2Cor  12:4}

 

இப்படிப்பட்டவனைக்குறித்து  மேன்மைபாராட்டுவேன்;  ஆனாலும்  என்னைக்குறித்து  என்  பலவீனங்களிலேயன்றி,  வேறொன்றிலும்  மேன்மைபாராட்டமாட்டேன்.  {2Cor  12:5}

 

சத்தியமானதை  நான்  பேசுகிறேன்;  நான்  மேன்மைபாராட்ட  மனதாயிருந்தாலும்,  நான்  புத்தியீனனல்ல,  ஆனாலும்  ஒருவனும்  என்னிடத்தில்  காண்கிறதற்கும்,  என்னாலே  கேட்கிறதற்கும்  மேலாக  என்னை  எண்ணாதபடிக்கு  அப்படிச்  செய்யாதிருப்பேன்.  {2Cor  12:6}

 

அன்றியும்,  எனக்கு  வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய  மேன்மையினிமித்தம்  நான்  என்னை  உயர்த்தாதபடிக்கு,  என்  மாம்சத்திலே  ஒரு  முள்  கொடுக்கப்பட்டிருக்கிறது;  என்னை  நான்  உயர்த்தாதபடிக்கு,  அது  என்னைக்  குட்டும்  சாத்தானுடைய  தூதனாயிருக்கிறது.  {2Cor  12:7}

 

அது  என்னைவிட்டு  நீங்கும்படிக்கு,  நான்  மூன்றுதரம்  கர்த்தரிடத்தில்  வேண்டிக்கொண்டேன்.  {2Cor  12:8}

 

அதற்கு  அவர்:  என்  கிருபை  உனக்குப்போதும்;  பலவீனத்திலே  என்  பலம்  பூரணமாய்  விளங்கும்  என்றார்.  ஆகையால்,  கிறிஸ்துவின்<Christ>  வல்லமை  என்மேல்  தங்கும்படி,  என்  பலவீனங்களைக்குறித்து  நான்  மிகவும்  சந்தோஷமாய்  மேன்மைபாராட்டுவேன்.  {2Cor  12:9}

 

அந்தப்படி  நான்  பலவீனமாயிருக்கும்போதே  பலமுள்ளவனாயிருக்கிறேன்;  ஆகையால்  கிறிஸ்துவினிமித்தம்<Christ>  எனக்கு  வரும்  பலவீனங்களிலும்,  நிந்தைகளிலும்,  நெருக்கங்களிலும்,  துன்பங்களிலும்,  இடுக்கண்களிலும்  நான்  பிரியப்படுகிறேன்.  {2Cor  12:10}

 

மேன்மைபாராட்டி,  புத்தியீனனாயினேன்;  நீங்களே  இதற்கு  என்னைப்  பலவந்தப்படுத்தினீர்கள்.  நான்  ஒன்றுமில்லையென்றாலும்,  மகா  பிரதான  அப்போஸ்தலருக்கும்  நான்  எவ்வளவும்  குறைந்தவனாயிராதபடியால்,  உங்களாலே  மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.  {2Cor  12:11}

 

அப்போஸ்தலனுக்குரிய  அடையாளங்கள்  எல்லாவிதமான  பொறுமையோடும்,  அதிசயங்களோடும்,  அற்புதங்களோடும்,  வல்லமைகளோடும்,  உங்களுக்குள்ளே  நடப்பிக்கப்பட்டதே.  {2Cor  12:12}

 

எதிலே  மற்றச்  சபைகளுக்குக்  குறைவாயிருந்தீர்கள்?  நான்  உங்களை  வருத்தப்படுத்தாதிருந்ததே  உங்களுக்குக்  குறைவு;  இந்த  அநியாயத்தை  எனக்கு  மன்னியுங்கள்.  {2Cor  12:13}

 

இதோ,  உங்களிடத்திற்கு  மூன்றாந்தரம்  வர  ஆயத்தமாயிருக்கிறேன்;  நான்  உங்களை  வருத்தப்படுத்துவதில்லை;  நான்  உங்களுடையதையல்ல,  உங்களையே  தேடுகிறேன்;  பெற்றாருக்குப்  பிள்ளைகளல்ல,  பிள்ளைகளுக்குப்  பெற்றார்களே  பொக்கிஷங்களைச்  சேர்த்துவைக்கவேண்டும்.  {2Cor  12:14}

 

ஆதலால்,  நான்  உங்களில்  எவ்வளவு  அதிகமாய்  அன்புகூருகிறேனோ  அவ்வளவு  குறைவாய்  உங்களால்  அன்புகூரப்பட்டிருந்தாலும்,  மிகவும்  சந்தோஷமாய்  நான்  உங்கள்  ஆத்துமாக்களுக்காகச்  செலவுபண்ணவும்  செலவுபண்ணப்படவும்  விரும்புகிறேன்.  {2Cor  12:15}

 

அப்படியாகட்டும்;  நான்  உங்களுக்குப்  பாரமாயிருக்கவில்லை;  ஆனாலும்,  உபாயமுள்ளவனாயிருந்து,  தந்திரத்தினாலே  உங்களைப்  பிடித்தேனாம்.  {2Cor  12:16}

 

நான்  உங்களிடத்திற்கு  அனுப்பினவர்களில்  எவன்மூலமாயாவது  உங்களிடத்தில்  பொழிவைத்  தேடினதுண்டா?  {2Cor  12:17}

 

தீத்து<Titus>  உங்களிடத்தில்  வரும்படி  நான்  அவனைக்  கேட்டுக்கொண்டு,  அவனுடனேகூட  ஒரு  சகோதரனை  அனுப்பினேன்;  தீத்து<Titus>  உங்களிடத்தில்  ஏதாவது  பொழிவைத்  தேடினானா?  நாங்கள்  ஒரே  ஆவியையுடையவர்களாய்,  ஒரே  அடிச்சுவடுகளில்  நடந்தோமல்லவா?  {2Cor  12:18}

 

நாங்கள்  யோக்கியர்களென்று  விளங்கும்படி  உங்களிடத்தில்  பேசுகிறோமென்று  எண்ணுகிறீர்களோ?  தேவனுக்குமுன்பாகக்  கிறிஸ்துவுக்குள்<Christ>  பேசுகிறோம்.  பிரியமானவர்களே,  சகலத்தையும்  உங்கள்  பக்திவிருத்திக்காகச்  செய்கிறோம்.  {2Cor  12:19}

 

ஆகிலும்  நான்  வந்து,  உங்களை  என்  மனதின்படியிருக்கிறவர்களாகக்  காணாமலும்,  நானும்  உங்கள்  மனதின்படியிருக்கிறவனாகக்  காணப்படாமலுமிருப்பேனோவென்றும்;  விரோதங்கள்,  வைராக்கியங்கள்,  கோபங்கள்,  வாக்குவாதங்கள்,  புறங்கூறுதல்,  கோட்சொல்லுதல்,  இறுமாப்பு,  கலகங்கள்  ஆகிய  இவைகள்  உங்களுக்குள்ளே  உண்டாயிருக்குமோவென்றும்;  {2Cor  12:20}

 

மறுபடியும்  நான்  வருகிறபோது,  என்  தேவன்  உங்களிடத்தில்  என்னைத்  தாழ்த்தும்படிக்கு  முன்  பாவஞ்செய்தவர்களாகிய  அநேகர்  தாங்கள்  நடப்பித்த  அசுத்தத்தையும்  வேசித்தனத்தையும்  காமவிகாரத்தையும்  விட்டு  மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து,  நான்  துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும்  பயந்திருக்கிறேன்.  {2Cor  12:21}

 

இந்த  மூன்றாந்தரம்  நான்  உங்களிடத்திற்கு  வருகிறேன்;  சகல  காரியங்களும்  இரண்டு  மூன்று  சாட்சிகளுடைய  வாக்கினால்  நிலைவரப்படும்.  {2Cor  13:1}

 

நான்  இரண்டாந்தரம்  உங்களிடத்திலிருந்தபோது  சொன்னதுபோல,  இப்பொழுது  தூரமாயிருந்தும்  உங்களிடத்திலிருக்கிறவனாக,  நான்  மறுபடியும்  வந்தால்  தப்பவிடமாட்டேனென்று  முன்பு  பாவஞ்செய்தவர்களுக்கும்  மற்ற  எல்லாருக்கும்  முன்னறிவித்து  எழுதுகிறேன்.  {2Cor  13:2}

 

கிறிஸ்து<Christ>  எனக்குள்ளே  பேசுகிறாரென்பதற்கு  அத்தாட்சி  தேடுகிறீர்களே;  அவர்  உங்களிடமாய்ப்  பலவீனரல்ல,  உங்களிடத்தில்  வல்லவராயிருக்கிறார்.  {2Cor  13:3}

 

ஏனெனில்  அவர்  பலவீனத்தால்  சிலுவையில்  அறையப்பட்டிருந்தும்,  தேவனுடைய  வல்லமையினால்  பிழைத்திருக்கிறார்;  அப்படி  நாங்களும்  அவருக்குள்  பலவீனராயிருந்தும்,  உங்களிடமாய்  விளங்கிய  தேவனுடைய  வல்லமையினால்  அவருடனேகூடப்  பிழைத்திருப்போம்.  {2Cor  13:4}

 

நீங்கள்  விசுவாசமுள்ளவர்களோவென்று  உங்களை  நீங்களே  சோதித்து  அறியுங்கள்;  உங்களை  நீங்களே  பரீட்சித்துப்  பாருங்கள்.  இயேசுகிறிஸ்து<Jesus  Christ>  உங்களுக்குள்  இருக்கிறாரென்று  உங்களை  நீங்களே  அறியீர்களா?  நீங்கள்  பரீட்சைக்கு  நில்லாதவர்களாயிருந்தால்  அறியீர்கள்.  {2Cor  13:5}

 

நாங்களோ  பரீட்சைக்கு  நில்லாதவர்களல்லவென்பதை  அறிவீர்களென்று  நம்புகிறேன்.  {2Cor  13:6}

 

மேலும்  நீங்கள்  ஒரு  பொல்லாங்கும்  செய்யாதிருக்கும்படியாக,  தேவனை  நோக்கி  விண்ணப்பம்பண்ணுகிறேன்.  நாங்கள்  பரீட்சைக்கு  நின்றவர்களென்று  காணப்படும்பொருட்டல்ல,  நாங்கள்  பரீட்சைக்கு  நில்லாதவர்கள்போலிருந்தாலும்,  நீங்கள்  நலமானதைச்  செய்யும்பொருட்டே  விண்ணப்பம்பண்ணுகிறேன்.  {2Cor  13:7}

 

சத்தியத்திற்கு  விரோதமாக  நாங்கள்  ஒன்றுஞ்செய்யக்கூடாமல்,  சத்தியத்திற்கு  அநுகூலமாகவே  செய்யக்கூடும்.  {2Cor  13:8}

 

நாங்கள்  பலவீனரும்  நீங்கள்  பலமுள்ளவர்களுமாயிருக்கையில்,  சந்தோஷப்படுகிறோம்;  நீங்கள்  நற்சீர்பொருந்தும்படிக்கும்  விண்ணப்பம்பண்ணுகிறோம்.  {2Cor  13:9}

 

ஆனதால்  இடித்துப்போடவல்ல,  ஊன்றக்  கட்டவே  கர்த்தர்  எனக்குக்  கொடுத்த  அதிகாரத்தின்படி,  நான்  உங்களிடத்தில்  வந்திருக்கும்போது,  கண்டிதம்பண்ணாதபடிக்கு,  நான்  தூரமாயிருந்து  இவைகளை  எழுதுகிறேன்.  {2Cor  13:10}

 

கடைசியாக,  சகோதரரே,  சந்தோஷமாயிருங்கள்,  நற்சீர்  பொருந்துங்கள்,  ஆறுதலடையுங்கள்;  ஏகசிந்தையாயிருங்கள்,  சமாதானமாயிருங்கள்,  அப்பொழுது  அன்புக்கும்  சமாதானத்துக்கும்  காரணராகிய  தேவன்  உங்களோடேகூட  இருப்பார்.  {2Cor  13:11}

 

ஒருவரையொருவர்  பரிசுத்த  முத்தத்தோடு  வாழ்த்துங்கள்.  {2Cor  13:12}

 

பரிசுத்தவான்களெல்லாரும்  உங்களுக்கு  வாழ்த்துதல்  சொல்லுகிறார்கள்.  {2Cor  13:13}

 

கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினுடைய<Jesus  Christ>  கிருபையும்,  தேவனுடைய  அன்பும்,  பரிசுத்த  ஆவியினுடைய  ஐக்கியமும்,  உங்கள்  அனைவரோடுங்கூட  இருப்பதாக.  ஆமென்.  {2Cor  13:14}

 

No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!