Sunday, December 04, 2022

அன்பார்ந்த புத்தகத் திருடர்களே!

'எவன் ஒருவன் மற்றவரின் புத்தகத்தைத்திருடு கிறானோ, படிக்கக் கடன் வாங்கிய புத்தகத்தைத் திருப்பித் தராமல் இருக்கிறானோ, அவன் கைகளில் அந்தப் புத்தகம் பாம்பாக மாறிக் கொத்தட்டும்... அவன் உடல் வெடித்துச் சிதறிச் சாகட்டும். அவன் தனக்கு ஏற்பட்ட சோகங்களை எண்ணிக் கண்ணீர் சிந்தட்டும். புத்தகப் புழுக்களுக்கு அவன் இரை ஆகட்டும். அவனுடைய இறுதி நாள் வரும்போது நரகத்தில் அவன் நெருப்புக்குத் தீனியாகட்டும்!''
 
-இப்படித்தான் அன்றைய நாட்களில் புத்தகங்கள், திருடு போகாமல் இருக்க சாபங்களினால்காப்பாற்றப் பட்டு வந்தன. ஆனால், அதையும் மீறி புத்தகங்கள் திருடுபோயின.
அச்சுத் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு ஆசிர மங்கள், குருகுலங்கள், புத்த மடாலயங்கள் ஆகிய வற்றில் உள்ளவர்கள் ஆட்டுத் தோலினால் ஆன 'வேலம்' என்ற பதப்படுத்தப்பட்ட தோலில் எழுதினார்கள். அப்போது ஏது ஜெராக்ஸ் எந்திரங்கள்? படி எடுக்க வேண்டும் எனில் மாதக்கணக்கில் கையினால் எழுத வேண்டும். உயிரை, உடலை வருத்தி உழைத்த படைப்பு காணாமல்போனால் கடுப்பாகும்தானே? அதனால்தான் இந்தச் சாபம் எல்லாம். இங்கிலாந்தில் நூலகத்தில் இருந்த வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து சில முக்கியப் பக்கங்களைக் கிழித்து எடுத்துச் சென்ற கோடீஸ்வர பிசினஸ் புள்ளி ஒருவரை இரண்டு ஆண்டுகள் சிறையில் தள்ளியது அந்நாட்டுச் சட்டம்! தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்நாட்களில், முறையான அனுமதி இல்லாமல் வருடம் ஒன்றுக்கு சுமார் 9 மில்லியன் இ-புத்தகங்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல, புதிதாக வரும் புத்தகங்களை 'பைரேட்டட் வெர்ஷன்'களாக மாற்றி உலகம் முழுக்க சப்ளை செய்யும் வியாபாரமும் ஜோராக நடக்கிறது.

புத்தகத்தின் உள்ளே இருக்கும் 'கன்டன்ட் திருட்டு' புகார் இன்னொரு வகை. 'யேசுவின் வாரிசுகள் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறார்கள். அவரைக் காப்பாற்ற ஒரு குரூப்பும், கொல்வதற்கு ஒரு குரூப்பும் அலைகிறது' என்பதுதான் டான் பிரவுன் எழுதிய 'டா வின்சி கோட்' புத்தகத்தின் கதை. இந்தக் கதை என்னுடைய 'டா வின்சி லெகசி' மற்றும் 'டாட்டர் ஆஃப் காட்' ஆகிய புத்தகங்களில் இருந்து திருடப் பட்டது என்று வழக்குப் போட்டார் லூயிஸ்பெர்டியூ என்பவர். இறுதியில் 'ஒரு நல்ல வாசகன் இரண்டுக் கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடித்துவிடுவான்' என்று சொல்லி, வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி. இதே டா வின்சி கோட் புத்தகம் 'ஹோலி ப்ளட் அண்ட் தி ஹோலி க்ரெய்ல்' என்ற புத்தகத்தைத் தழுவி எழுதப்பட்டது என மற்றொரு வழக்கும் தொடுக்கப்பட்டது. அதுவும் தள்ளுபடி.

'ஹாரி பாட்டர்' எழுதிய ஜே.கே.ரௌலிங்கின் பாடுதான் திண்டாட்டம். 'இது என் கதையில் இருந்து உருவப்பட்ட ஐடியா' என்று அவருக்கு எதிராக எக்கச்சக்கப் பேர் போர்க் கொடி தூக்கினார்கள். அதில் முக்கிய மானது 'ஆட்ரியன் ஜேக்கப்ஸ்' என்ற எழுத்தாளர் எழுதிய 'தி அட்வெஞ்சர்ஸ் ஆஃப் வில்லி தி விசார்ட்' என்ற புத்தகம். 1980- களில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத் தின் ஆசிரியர் 1997-ம் ஆண்டி லேயே இறந்துவிட்டார். ஆனால், சென்ற வருடம்தான் ரௌலிங் மேல் வழக்குப் போடப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை புத்தகத் திருட்டை ஜாலி யாகப் பார்க்கும் இன்னொரு பார்வையும் உண்டு. 'புத்தகங்களை இரவல் கொடுக்காதீர்கள். என் நூலகத்தில் உள்ளவை அப்படிப் பெறப்பட்டவைதான்' என்று மார்க் ட்வைன் என்ற அறிஞர்சொன்னார். 'புத்தகங்களைத் திருடுங்கள். ஏனெனில், புத்தகம் திருடுவது வெண்ணெயைத் திருடுவதைவிடப் புனிதமானது' என்றார் வலம்புரிஜான். இப்படிப் பல ரகம் உண்டு!
 
-மதுமிதா, இரா.மன்னர் மன்னன்

This article was stolen from:
Source: https://www.vikatan.com/oddities/miscellaneous/38736--2


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!